Published : 24 Jan 2025 04:24 PM
Last Updated : 24 Jan 2025 04:24 PM
புதுடெல்லி: ஜேஇஇ (JEE) போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை நடத்தி வரும் FIITJEE நிறுவனம் டெல்லி, உத்தரப் பிரதேசம், பிஹார் என வட இந்தியாவின் பல பகுதிகளில் தமது மையங்களை திடீரென மூடியதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய தொழில்நுட்ப கழகங்களில் (IIT) சேருவதற்கான போட்டித் தேர்வு ஜேஇஇ உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை FIITJEE (Forum for Indian Institute of Technology Joint Entrance Examination) நடத்தி வருகிறது. 1992-ல் டெல்லியில் தொடங்கப்பட்ட FIITJEE நாடு முழுவதிலும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள தமது பல கிளைகளை FIITJEE திடீரென முடியுள்ளது. இதனால், FIITJEE-ல் சேர்ந்து நுழைவு / போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பெற்றோர்கள் பலர், கட்டணத்தைத் திருப்பித் தரக்கோரி காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
காஜியாபாத் நகரில் FIITJEE மூடப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர் சங்கத்தின் தலைவர் விவேக் தியாகி, “இது போட்டித் தேர்வுகளுக்கான மிக முக்கிய காலம் என்பதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். FIITJEE-யிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதிக முன்பணம் செலுத்தியுள்ள பெற்றோர்கள் பலர் காவல் நிலையங்களில் புகார் அளித்து FIR பதிவு செய்துள்ளனர்” என தெரிவித்தார்.
நொய்டாவில் உள்ள பெற்றோர்களும் இதேபோன்று புகார்களைப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய நொய்டாவைச் சேர்ந்த பெற்றோர் அவினாஷ் குமார், “நாங்கள் எங்கள் குழந்தையை FIITJEE-ல் சேர்த்திருந்தோம். இப்போது அது மூடப்பட்டுள்ளது. நாங்கள் FIR பதிவு செய்ய இங்கு வந்துள்ளோம். FIIT JEE நிர்வாகம், தொலைபேசிகளை எடுக்கவில்லை. அவர்கள் மோசடி செய்துவிட்டார்கள். அவர்கள் எங்கள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். இது என் குழந்தையின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை என்பதால், அரசாங்கம் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பாட்னாவைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், தனது புகாரை பதிவிட்டுள்ளார். அதில், "FIITJEE தனது கிளையை திடீரென மூடியதால் எனது மகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நான் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். கிளை மூடப்பட்டதற்கான தெளிவான விளக்கத்தையும், நாங்கள் செலுத்திய முழு பணத்தையும் அளிக்க வேண்டும் என கோரி உள்ளேன். மேலும், எனது மகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை வழங்குமாறும் கேட்டுள்ளேன். அதோடு, காவல்துறையிலும் புகார் அளித்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT