Published : 24 Jan 2025 01:53 PM
Last Updated : 24 Jan 2025 01:53 PM
மும்பை: மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10 ஊழியர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நாக்பூர் அருகே உள்ள இந்த ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே, "பந்தாரா மாவட்டத்தில் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை 10.30 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் எல்டிபி பிரிவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர்" என குறிப்பிட்டார்.
எல்டிபி பிரிவில் இருந்த 14 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாகவும், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மீதமுள்ள 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், இதற்காக இடிபாடுகளை அகற்றும் அகழ்வாராய்ச்சி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெடிப்பு மிகவும் தீவிரமானது என்றும், 5 கி.மீ தூரம் வெடிச் சத்தம் கேட்டது என்றும், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழும்பியதை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலை வெடிவிபத்து குறித்துப் பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “வெடிவிபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் சிக்கிய ஐந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் உயர் அதிகாரிகள் உள்ளனர். நாக்பூரிலிருந்து மீட்புக் குழுக்கள் விரைவில் வந்து சேரும். மருத்துவக் குழுக்களும் உதவத் தயாராக உள்ளன.
துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினரின் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த வெடிவிபத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT