Published : 23 Jan 2025 07:53 PM
Last Updated : 23 Jan 2025 07:53 PM
புதுடெல்லி: தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சிதைக்கக்கூடியவையாக போலி சித்தரிப்புகள் இருப்பதாகவும், இத்தகைய போலி சித்தரிப்புகளுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் கமார் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில், மொரிஷியஸ், பூடான், கஜகஸ்தான், நேபாளம், நமீபியா, இந்தோனேஷியா, ரஷ்யா, துனிஷியா உள்ளிட்ட 13 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் (EMBs) பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சமகால தேர்தல் மேலாண்மையின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "சவால்கள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில் ஜனநாயக மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய ஆண்டாக 2024ம் ஆண்டு தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு இருந்தது. செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர் நம்பிக்கையை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கினாலும், அது சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தகவல்கள் போன்ற சவால்களையும் கொண்டுவருகிறது. இந்த தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதற்கான உத்திகளை நெறிப்படுத்தவும், அபாயங்களைக் குறைக்கவும் தேர்தல் மேலாண்மை அமைப்புகள் பாடுபட வேண்டும். போலியான சித்தரிப்புகள், தேர்தல் செயல்முறைகள் மீதான நம்பிக்கையை சிதைப்பதாக உள்ளன. இவற்றுக்கு எதிராக எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும்.
தேர்தல்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவு, ஆன்லைன் மற்றும் ரிமோட் வாக்களிப்பு, பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும். தேர்தல்களை மிகவும் வெளிப்படையானதாகவும், உள்ளடக்கியதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் தொழில்நுட்ப வாய்ப்புகளை தேர்தல் மேலாண்மை அமைப்புகள் ஆராய வேண்டும். உலகளவில் தேர்தல் செயல்முறைகளைப் பாதுகாப்பதில் மட்டுமல்லாமல், அவற்றின் அணுகல் மற்றும் தாக்கத்தை விரிவுபடுத்துவதிலும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது.
2024ல், 64.7 கோடி வாக்காளர்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் என இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி முடித்தது. தேர்தல்கள் உள்ளடக்கியதாக இருந்தன. குறிப்பாக பெண்கள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் (PwDs) மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களிளின் பங்கேற்பு அதிகமாக இருந்தது. உலகளவில் ஜனநாயக செயல்முறைகளைப் பாதுகாப்பதற்கும் தேர்தல் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT