Published : 23 Jan 2025 03:33 PM
Last Updated : 23 Jan 2025 03:33 PM

“வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றுபட வேண்டும்” - நேதாஜி பிறந்தநாள் உரையில் பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: வளர்ந்த இந்தியாவை உருவாக்க சுகமான சூழலை விட்டு நாம் அனைவரும் வெளியே வர வேண்டும் என்றும், அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம், பராக்கிரம தினமாக மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் தனது உரையில், "நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான இன்று, முழு தேசமும் அவரை மரியாதையுடன் நினைவுகூர்கிறது. இந்த ஆண்டு பராக்கிரம தின கொண்டாட்டங்கள் ஒடிசாவில் உள்ள அவரது பிறந்த இடத்தில் நடைபெறுகிறது.

வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதில் இன்று நாம் ஈடுபட்டுள்ளோம். இதற்கு, ​​நேதாஜி சுபாஷின் வாழ்க்கை மரபு தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும். நேதாஜி சுபாஷ் போஸின் முதன்மையான மற்றும் முக்கியமான குறிக்கோள் விடுதலைப் பெற்ற இந்தியா. இந்த உறுதியை அடைய, அவர் தனது ஒரே அளவுகோலான விடுதலைப் பெற்ற இந்தியா என்ற முடிவில் உறுதியாக நின்றார்.

நேதாஜி ஒரு வளமான குடும்பத்தில் பிறந்தார். சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஒரு மூத்த அதிகாரியாக இருந்து வசதியான வாழ்க்கையை நடத்தியிருக்கலாம். இருப்பினும், சுதந்திரத்திற்கான தேடலில் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அலைந்து திரியும் சிரமங்கள் நிறைந்த கடினமான பாதையை நேதாஜி தேர்ந்தெடுத்தார். சுகமான சூழலுடன் கூடிய வசதிகள் நிறைந்த வாழ்க்கைக்கு அவர் கட்டுண்டுவிடவில்லை.

இன்று, நாம் அனைவரும் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க சுகம் தரும் சூழல் மண்டலங்களை விட்டு வெளியேற வேண்டும். உலகளவில் சிறந்தவர்களாக நாம் மாற வேண்டும். அதற்கான செயல்திறனில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி ஆசாத் ஹிந்த் ஃபவுஜை (Azad Hind Fauj) உருவாக்கினார். இதில் ஒவ்வொரு பிராந்தியம் மற்றும் வகுப்பைச் சேர்ந்த துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்தனர். வெவ்வேறு மொழிகளைக் கொண்டிருந்தாலும், அவர்களின் பொதுவான உணர்வு நாட்டின் சுதந்திரமாக இருந்தது. இந்த ஒற்றுமை இன்றைய வளர்ந்த இந்தியா இலக்கை அடைவதற்கு ஒரு பாடம். அன்று சுதந்திரத்துக்காக ஒற்றுமை அவசியமானது போல, இப்போது வளர்ந்த இந்தியாவை உருவாக்க அது மிக முக்கியமானது.

உலகளவில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சாதகமான சூழல் உள்ளது. 21 ஆம் நூற்றாண்டை இந்தியா எவ்வாறு தனக்கென ஆக்குகிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. நேதாஜி சுபாஷிடமிருந்து உத்வேகம் பெற்று இந்தியாவின் ஒற்றுமையில் கவனம் செலுத்து மிகவும் முக்கியம். நாட்டை பலவீனப்படுத்தவும் அதன் ஒற்றுமையை சீர்குலைக்கவும் முயல்பவர்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றி நேதாஜி சுபாஷ் மிகவும் பெருமைப்பட்டார். இந்தியாவின் வளமான ஜனநாயக வரலாற்றைப் பற்றி அடிக்கடி பேசினார். அதிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். இன்று, இந்தியா ஒரு காலனித்துவ மனநிலையிலிருந்து மீண்டு, அதன் பாரம்பரியத்தில் பெருமையுடன் வளர்ந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், விரைவான வளர்ச்சி சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளது. ராணுவ வலிமையை அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது மிகப்பெரிய வெற்றியாகும். கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் நவீன உள்கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்தின் வலிமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. நேதாஜி சுபாஷால் ஈர்க்கப்பட்டு, நாம் அனைவரும் வளர்ந்த இந்தியா எனும் ஒரே குறிக்கோளுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். இதுவே நேதாஜிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x