Published : 23 Jan 2025 08:36 AM
Last Updated : 23 Jan 2025 08:36 AM
வாஷிங்டன் / புதுடெல்லி: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாடு உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கு எளிதில் விசா கிடைக்கச் செய்வதிலும் இந்தியா ஆர்வமாக உள்ளது. கடந்தாண்டில் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் 118 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.
இந்நிலையில், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கும் அதேபோல் வரி விதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் விரைவில் சந்தித்து பேசினால் வரி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும், அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க உதவும் எனவும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
அடுத்த மாதம் ட்ரம்ப் - மோடி சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்ய இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த சந்திப்புக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இதனிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோ பதவியேற்ற ஒரு மணி நேரத்துக்குள் தனது முதல் இருதரப்பு சந்திப்பை எஸ்.ஜெய்சங்கருடன் நடத்தினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் தொடர்பாக இருவரும் விரிவான ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா உடனிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க வெளியுறவு அமைச்சராக ரூபியோ பதவியேற்ற பிறகு அவரது முதல் இருதரப்பு சந்திப்பில் அவருடன் பேசியதில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் இரு நாடுகளின் விரிவான இருதரப்பு உறவை மறு ஆய்வு செய்தோம். இதில் ஒரு வலுவான ஆதரவாளராக ரூபியோ இருந்து வருகிறார். பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டார். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த அவருடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் எச்சரிக்கை என்ன? - அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின் பேசும்போது, “சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். குறிப்பாக, டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும்.
எனவே, புதிய கரன்சியை உருவாக்க மாட்டோம் என்றும், டாலருக்கு பதிலாக வேறு கரன்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும்” என்று கூறினார். குறிப்பாக, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதைத் தொடர்ந்தால் தனது தலைமையிலான நிர்வாகம் அதே அளவிலான வரியினை இந்திய பொருட்களின் மீது விதிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்தது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT