Published : 23 Jan 2025 02:25 AM
Last Updated : 23 Jan 2025 02:25 AM

மாவோயிஸ்ட் தலைவர் சலபதியின் வீழ்ச்சி: மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமே காட்டி கொடுத்தது

மனைவி அருணாவுடன் செல்பி எடுத்துக்கொண்ட மாவோயிஸ்ட் தலைவர் சலபதி.

அரசு பணியை உதறிவிட்டு மாவோயிஸ்ட் தலைவராக உருவான சலபதியின் வீழ்ச்சி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சத்தீஸ்கர் - ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 27 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதில் தமிழகம் - ஆந்திர எல்லையில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம் ரெட்டி என்கிற சலபதியும் (60), கொல்லப்பட்டார். அரசு பணியை உதறிவிட்டு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய பிரிவின் மூத்த தலைவரான சலபதி கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் வீழ்ச்சி மாவோயிஸ்ட்களின் வீழ்ச்சி என கருதப்படுகிறது.

சலபதி, தமிழக ஆந்திர எல்லையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், தவனம்பல்லி அருகே உள்ள மத்தியம்பைபல்லி கிராமத்தை சேர்ந்தவராவார். ஆனால், அந்த கிராமத்தில் இவர் குறித்து விசாரித்தால், அவர் தொடர்பான எந்த விவரங்களையும் கூற அப்பகுதி மக்கள் விரும்ப வில்லை.

சலபதிக்கு இரண்டு அண்ணன்கள். இதில் ஒருவர் ஆந்திர மாநில பட்டுநூல் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இவரது மகன் இன்னமும் அதே கிராமத்தில்தான் வசித்து வருகிறார். சலபதியின் பெற்றோரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டனர். சலபதி பிறப்பதற்கு முன்னரே அவரது பெற்றோரும் அந்த கிராமத்தை விட்டு சென்று விட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

சலபதியின் தந்தையும், தாத்தாவும் மதியம்பைபல்லியில் பிறந்தனர் என்றும், சலபதியின் பெற்றோருக்கு ஒரு குடிசை வீடும், சிறிதளவு விவசாய நிலமும் இருந்ததாகவும், அதனையும் அவர்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னரே விற்றுவிட்டு சென்று விட்டதாகவும் அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு வேலையை உதறிய சலபதி: ஆந்திர அரசின் பட்டுநூல் துறையில் சலபதி பணியாற்றி உள்ளார். இவர் சித்தூர் அடுத்துள்ள மதனபல்லியில் உள்ள பட்டுநூல் துறை அலுவலகத்தில்தான் பணியாற்றினார். இவரை விசாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்தார்கள் என்றும், அப்போதுதான் மாவோயிஸ்ட்களுடன் சலபதிக்கு பழக்கமும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்தில்தான் சலபதி தனது அரசு வேலையை உதறிவிட்டு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு தலைமறைவானார். விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாவோயிஸ்ட் உறுப்பினரான அருணாவை, சலபதி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காட்டிக்கொடுத்த செல்பி: திருமணம் ஆன பின்னர் சலபதி ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர் என பல மாநிலங்களில் சுற்றி திரிந்து மாவோயிஸ்ட்களின் முக்கிய தலைவராக சலபதி மாறினார்.

ஒரு சிறந்த திட்டமிடும் மாவோயிஸ்டாக சலபதி இருந்தார் என கூறுகின்றனர். இவர் குறி வைத்தால் அது தவறாது என்னும் நம்பிக்கையும் மாவோயிஸ்ட்களிடையே உள்ளது. 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி திருமலை பிரம்மோற்சவம் தொடங்கப்பட்டது. அதற்கு முதல்நாளே அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க மாலை காரில் அலிபிரி வழியாக திருமலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கண்ணிவெடி வெடித்தது. இதில் சந்திரபாபு நாயுடு உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதிருஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் சலபதி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டில், தெலுங்கு தேசம் கட்சியின் அரக்கு தொகுதி எம்எல்ஏ-வான கிடாரி சர்வேஸ்ர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ சீவேரி சோமலா ஆகியோர் மாவோயிஸ்ட்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதிலும் சலபதி முக்கிய பங்கு வகித்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது நடைபெற்ற என்கவுன்ட்டரில் பலியான சலபதி, ஒடிசா மாநில மாவோயிஸ்ட் அமைப்பின் செயலாளராக சலபதி பணியாற்றி வந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இவரை உயிரோடு அல்லது பிணமாக பிடித்து கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்குவதாகவும் ஒடிசா மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால், பல ஆண்டுகளாக இந்த சலபதி யார் ? அவர் எப்படி இருப்பார் ? என்பதே போலீஸார் உட்பட பலருக்கு தெரியாமல் இருந்தது.

ஆனால், மாவோயிஸ்ட் அருணாவை திருமணம் செய்து கொண்ட பின்னர், கடந்த 2016-ம் ஆண்டு இருவரும் இணைந்து ஒரு செல்பி எடுத்து கொண்டனர். இந்த செல்பு புகைப்படம் மெல்ல மெல்ல சமூக வலைத்தளங்களில் வெளிவர தொடங்கியது.

அதன் பின்னர்தான் சலபதி என்பவர் எப்படி இருப்பார் என்பதே வெளி உலகுக்கு தெரியவந்தது. தற்போது அதே புகைப்படம் தான் அவரின் உயிரையும் பறிக்க காரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x