Published : 23 Jan 2025 02:15 AM
Last Updated : 23 Jan 2025 02:15 AM
தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் தேசிய சுகாதார திட்டம் பல சாதனைகளை படைத்ததாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 12 லட்சம் கூடுதல் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் 220 டோஸ் கரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டன. கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து கர்ப்பிணிகள் இறப்பு வீதம் 83 சதவீதம் குறைந்துள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு 75 சதவீதம் குறைந்துள்ளது. காச நோய் பாதிப்பு ஒரு லட்சம் பேருக்கு 22 என்ற அளவில் குறைந்துள்ளது.
ஆயுஸ்மான் ஆரோக்ய மந்திர் மையங்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 1.72 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது. காசநோய் ஒழிப்புத்திட்டம் 9.40 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவியது. 1,56,572 லட்சம் தன்னார்வலர்கள் இப்பணியில் இணைந்துள்ளனர்.
பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 4.53 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாட்டு மக்களுக்கு பலனளிக்கும் இந்த தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தொடர மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
சணல் ஆதரவு விலை அதிகரிப்பு: சணலுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை 2025-26-ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,650-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இது கடந்தாண்டில் ரூ.5,335-ஆக இருந்தது. தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.315 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு சராசரி உற்பத்தி செலவின் மீது 66.8 சதவீத வருவாய் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இது சணல் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 40 லட்சம் குடும்பங்களுக்கு பயன் அளிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT