Published : 23 Jan 2025 01:59 AM
Last Updated : 23 Jan 2025 01:59 AM
ஜப்பானிலிருந்து புல்லட் ரயில் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக தாமதம் ஏற்படுவதால், மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சூரத் - பிலிமோரா இடையே அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் ஜப்பானின் ஷிங்கன்சென் புல்லட் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஜப்பானின் புல்லட் ரயில்கள் 2030-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியா வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 2033-ம் ஆண்டில் ஜப்பானின் புல்லட் ரயில்கள் இந்தியா வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதுவரை புல்லட் ரயில் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை, இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் இதன் முழு வேகமான மணிக்கு 280 கி.மீ செல்லும் வகையில் சிக்னல் கருவிகளை அமைப்பதற்கான டெண்டரை தேசிய அதிவேக ரயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை எடுக்கும் நிறுவனம், புல்லட் ரயில் வழித்தடத்தில் ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு (இடிசிஎஸ்) 2-ம் கட்ட சிக்னல் கருவிகளை அமைக்கும். இது ஜப்பானின் சிங்கன்சன் ரயில்களுக்கான டிஎஸ்-ஏடிசி சிகனல்களை விட சற்று வித்தியாசமானது.
புல்லட் ரயில் வழித்தடத்தில் 2027-ம் ஆண்டில் வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ அதிக முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புல்லட் ரயில் வழித்தடத்தை, ஜப்பான் ரயில்களுக்காக நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கினாலும், ஜப்பான் புல்லட் ரயில்கள் இயக்குவதற்கான சிக்னல் கருவிகைளை அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியும்’’ என்றார்.
ஜப்பானின் புல்லட் ரயில்கள் இயக்கப்படும்போது, வந்தே பாரத் ரயில்களும் , அதற்கான சிக்னல் அமைப்புகளும் வேறு திட்டத்துக்கு மாற்றப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT