Published : 23 Jan 2025 01:32 AM
Last Updated : 23 Jan 2025 01:32 AM

தீ விபத்து புரளியால் பறிபோன உயிர்கள்: எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பயணிகள் பலி

ஜல்காவ்ன்: ரயிலில் தீவிபத்து என புரளி ஏற்பட்டதைத் தொடர்ந்து தண்டவாளத்தில் குதித்த 12 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ்ன் மாவட்டம் மஹேஜி-பார்த் ஹடே ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை 5 மணியளவில் லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீபிடித்து விட்டது என யாரோ புரளியைக் கிளப்பினர். இதையடுத்து பயணிகள் சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர். ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டது என்ற பயத்தால் பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறிக் கொண்டு கீழே இறங்கினர். சில பயணிகள் அருகில் இருந்த தண்டவாளம் வழியாக ஓட முயன்றனர்.

அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-டெல்லி கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மீது மோதியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த னர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து புவசாவல் பகுதியிலிருந்து விபத்து மீட்பு ரயில் கொண்டு செல்லப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x