Published : 23 Jan 2025 01:24 AM
Last Updated : 23 Jan 2025 01:24 AM

2025-ன் முதல் 3 வாரங்களில் தினமும் குறைந்தது 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர்: உள்துறை அமைச்சகம்

2025-ம் ஆண்டின் முதல் 3 வாரங்களில் தினந்தோறும் குறைந்தது 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருவதாவது: புத்தாண்டு பிறந்து முதல் 3 வாரங்களுக்குள் 48 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப்படையினர், துணை ராணுவத்தினர், போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் மூலம் மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதாவது, நடப்பு ஜனவரி மாதத்தின் முதல் 3 வாரங்களில் தினந்தோறும் குறைந்தது 2 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 14 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் கும்பலின் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் என்பவரின் தலைக்கு அரசு ரூ.1 கோடி விலை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகள் இடையே உள்ள ஒருங்கிணைந்த முயற்சிகளால் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த கூட்டு முயற்சியால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன. மாவோயிஸ்டகளை ஒடுக்குவதற்காக 2019 முதல் தற்போது வரை 290 முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில் 58 முகாம்கள் கடந்த 2024-ல் அமைக்கப்பட்டன. நடப்பாண்டில் மேலும் 88 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. 2024-ம் ஆண்டில் மட்டும் 290 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையும் நக்சல்கள், மாவோயிஸ்ட்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு 2 சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டம் (எஸ்ஐஎஸ்), சிறப்பு மத்திய அரசு உதவித்திட்டம் (எஸ்சிஏ) என்ற பெயரிலான இந்தத் திட்டங்கள் வரும் 2026 மார்ச் வரை அமலில் இருக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x