Published : 22 Jan 2025 06:51 PM
Last Updated : 22 Jan 2025 06:51 PM
புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் குழந்தைகளும் துறவிகளாக உள்ளனர். இந்நிலையில், அவர்களிடம் ஆசி பெற முகாம்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா 45 நாட்களுக்காக நடைபெற்று வருகிறது. ஜனவரி 13-ம் தேதி துவங்கிய இந்த மகா கும்பமேளாவில் பாபாக்கள் எனும் பல்வேறு வகையான துறவிகள் முகாமிட்டுள்ளனர். மொத்தம் உள்ள 13 அகாடாக்களின் ஒன்றில் இந்த துறவிகள் இணைந்திருக்கிறார்கள். திரிவேணி சங்கமத்தின் கரையில் தம் அகாடாக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இவர்கள் முகாம் அமைத்துள்ளனர். இந்த முகாம்களில் தங்கியுள்ளவர்களில் குழந்தைத் துறவிகளும் உள்ளனர். இவர்களை தரிசித்து ஆசிபெற அவர்களது முகாம்களில் பொதுமக்கள் அலைமோதுகின்றனர்.
ஜுனா அகாடாவின் முகாமில் 8 வயது துறவியாக கிரிராஜ் புரி அமர்ந்துள்ளார். சாம்பல் பூசிய அவரது உடலும், தலையில் மலர்களுடனான காவி துண்டுதான் இந்தக் குழந்தையும் ஒரு துறவி என்பதைக் காட்டுகிறது. இவர், மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் கண்டுவா மாவட்டத்தை சேர்ந்தவர். பள்ளிக்குச் சென்று படிக்கும் இந்தக் குழந்தை தன்னை ஒரு துறவி எனக் கூறுகிறார். வளர்ந்து நாகா சாதுவாக மாறுவது தன் விருப்பம் எனக் கூறுபவர், தனது குருவான மஹந்த் தனாவதியுடன் கும்பமேளாவிற்கு வருகை தந்துள்ளார். எந்நேரமும் ஹனுமர் மந்திரம் ஓதியபடி காலை முதல் இரவு வரை அமர்ந்துள்ளவரது அருகில் கதாயுதமும் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தை துறவியின் குருவான மஹாந்த் தனாவதி கூறும்போது, ‘இந்த பாபா பிறந்ததில் இருந்து, தனது 4 வயது வரை வெறும் பாலையே குடித்தே வளர்ந்தார். அவருக்கு விவரம் தெரிந்ததில் இருந்து ஆன்மீகத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இதனால், நாகா சாதுவாக ஆக வேண்டி அவர், இங்கு கடந்த இரண்டு வருடங்களாக என்னுடன் வருகை புரிகிறார்.’ எனத் தெரிவித்தார்
இதன் அருகிலுள்ள முகாமிலும் ஒரு 7 வயது குழந்தை துறவி ஆஷு கிரி அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். உபியின் காஜியாபாத்தை சேர்ந்த இவர், அருகிலுள்ள சிக்கந்தரா ராவின் குருகுலத்தில் படித்து வருகிறார். வரும் காலத்தில் நாகா சாதுவாக மாறுவது தன் விருப்பம் எனக் கூறுகிறார் இந்த துறவி ஆஷு. கழுத்திலும், கைகளிலும் நிறைந்து இருக்கும் ருத்ராட்ச மாலைகள் மட்டுமே அவருக்கு ஒரு துறவி தோற்றத்தைத் தருகிறது. தன்னிடம் வைத்துள்ள உடுக்கையை அடித்து, கொத்தாகக் கட்டி வைத்திருக்கும் மயில் தோகைகளால் ஆசி வங்குகிறார்.
இவரை பற்றி உடனிருக்கும் ராஜஸ்தானின் புஷ்கர் ஆசிரமத்தின் பெண் துறவி சீமா கிரி கூறும்போது, ‘இவரது பெற்றோருக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. எங்களிடம் ஆசிபெற வந்தவர்களிடம் நாங்கள் அவர்களுக்கு பிறக்கும் முதல் குழந்தையை எங்களுக்கு நேர்ந்து விட வேண்டும் எனக் கூறினோம். அதன்படி அவர்களும் எங்களிடம் கொடுத்துவிட்டனர். இவரது பெற்றோருக்கும் இப்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.’ எனத் தெரிவித்தார்.
ஜுனா அகாடாவின் இன்னொரு முகாமிலும் 6 வயது குழந்தை துறவியாக பிரேம் புரி அமர்ந்துள்ளார். மகா கும்பமேளாவில் முகாமிட்ட துறவிகளில் மிகவும் வயது குறைந்தவராக இவர் கருதப்படுகிறார். இவர்முன் எந்நேரமும் யாகம் நடைபெறுகிறது. இவர் தன்னைக் காணவரும் பக்தர்களுக்கு விளையாடிய படியே ஆசி தருகிறார். இந்த மூன்று குழந்தை துறவிகள் முன்பாக காணிக்கை வழங்க தட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் நோட்டுக்களையும் போடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT