Published : 22 Jan 2025 05:31 AM
Last Updated : 22 Jan 2025 05:31 AM
புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த கொடுமைக்கு பின்னணியில் பலர் இருப்பதாக மருத்துவர்களும், அந்தப் பெண்ணின் பெற்றோரும் கூறிவந்தனர். அத்துடன் மாநிலம் தழுவிய அளவில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களு
டன் முதல்வர் மம்தா பானர்ஜி பல முறை பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் முடியவில்லை. பின்னர் இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது.
எனினும், மேற்கு வங்க அரசு, போலீஸார் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா செஷன்ஸ் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணையின் போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருத வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க கோரி, மேற்கு வங்க அரசு உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தது.
உயர் நீதிமன்ற அமர்வை அணுகி இதுதொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்க அட்வகேட் ஜெனரல் கிஷோர் தத்தா வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கேட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். என் மகள் கொல்லப்பட்டதற்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT