Published : 21 Jan 2025 07:18 PM
Last Updated : 21 Jan 2025 07:18 PM
புதுடெல்லி: டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசுப் பள்ளிகளில் இலவச கல்வியையே ஒழித்துவிடும். மத்தியில் ஆளும் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையானது தேசிய தலைநகருக்கும், நாட்டுக்கும் ஆபத்தானது என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
70 தொகுதிகளக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தனது தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை கடந்த வாரம் வெளியிட்ட பாஜக, அதன் இரண்டாம் பகுதியை இன்று வெளியிட்டது. அதில், ‘டெல்லியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு கே.ஜி (கிண்டர் கார்டன்) முதல் பி.ஜி (போஸ்ட் கிராஜுவேட்) வரை இலவசக் கல்வி வழங்குவோம்’ என்று பாஜக புதிய வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. இதனை பல்வேறு கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இது குறித்து கூறும்போது, “மத்தியில் ஆளும் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையானது தேசிய தலைநகருக்கும் நாட்டுக்கும் ஆபத்தானது. நாங்கள் கல்வியை இலவசமாக்கியுள்ளோம். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், இலவசக் கல்வி மற்றும் இலவச மின்சாரத்தை நிறுத்துவார்கள். மொஹல்லா கிளினிக்குகள் உட்பட இலவச சுகாதார சேவைகளை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசுப் பள்ளிகளில் இலவச கல்வியையே ஒழித்துவிடும். அரசுப் பள்ளிகளில் தேவைப்படும் மாணவர்களுக்கு மட்டும் இலவசக் கல்வி வழங்கப்படும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது. நான் டெல்லி மக்களை எச்சரிக்க விரும்புகிறேன். இது மிகவும் ஆபத்தான கட்சி. தவறுதலாக அவர்களுக்கு வாக்களித்தால், உங்கள் குடும்பங்கள் சிரமத்துக்கு ஆளாகும். நீங்கள் டெல்லியில் வசிக்க முடியாத சூழல் உருவாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT