Published : 18 Jan 2025 01:42 AM
Last Updated : 18 Jan 2025 01:42 AM

ராணுவ அதிகாரியை திருமணம் செய்ய காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

பெற்றோர் நிச்சயித்த ராணுவ அதிகாரியை திருமணம் செய்வதற்காக 2 ஆண்டுகளாக காதலித்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண் குற்றவாளி என நெய்யான்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை கரீஸ்மாவின் பெற்றோர் நிச்சயம் செய்தனர். இதற்கு கரீஸ்மாவும் சம்மதித்தார்.

காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, பல வழிகளை கரீஸ்மா யோசித்தார். ஷரோன் ராஜை ரகசியமாக கொலை செய்ய முடிவு செய்தார். சக்தி வாய்ந்த வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து கொல்வதற்காக, அதன் விவரங்களை இணையதளத்தில் தேடினார். ஒரு முறை பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்தார் கரீஸ்மா. மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என ஷரோன் ராஜ்க்கு கரீஸ்மா கொடுத்தார். ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என நினைத்து அதை ஷரோன் ராஜ் குடித்தார். தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் பலமுறை வாந்தி எடுத்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ் , உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.

ஓராண்டு சிறையில் இருந்த கரீஸ்மா ஜாமினில் வெளியேவந்தார். கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கரீஸ்மா கொலை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x