Published : 16 Jan 2025 03:06 AM
Last Updated : 16 Jan 2025 03:06 AM
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ‘அம்ரித் ஸ்நானம்’ நிகழ்ச்சியில் திரிவேணி சங்கமத்தில் 3.5 கோடி பேர் புனித நீராடியதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இங்கு கடந்த 2 நாட்களில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது.
மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்த விழா உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நடைபெறுகின்றன. பவுஸ் பூர்ணிமா தினத்தில் தொடங்கிய மகா கும்பமேளாவின் முதல் நாளில் புனித நீராடல் நிகழ்ச்சி தொடங்கியது. அன்றைய தினம் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மகர சங்கராந்தியின் 2-ம் நாளான நேற்று ‘அம்ரித் ஸ்நானம்’ என்ற முதல் முக்கிய புனித நீராடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நாக சாதுக்கள் தலைமையில் அக்காரா அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள் புனித நீராடினர். ஸ்ரீ பஞ்சாயத்தி அகாரா மகாநிர்வாணி, ஸ்ரீ ஷாம்பு பஞ்சாயத்தி அடல் அகாரா ஆகியோர் அம்ரித் ஸ்நானம் நிகழ்ச்சிய முதல் நபர்களாக புனித நீராடினர். அதைத் தொடர்ந்து சாதுக்களும், பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அம்ரித் ஸ்நானம் நிகழ்ச்சியில் 3.5 கோடி புனித நீராடியதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். கடந்த 2 நாட்களில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது. மகா கும்பமேளாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், பிரயாக்ராஜில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.
தூய்மை பணி தீவிரம்: கடந்த 2 நாட்களாக சங்கமம் படித்துறையில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியதால், அங்கு சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. குப்பைகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. கழிவறைகளும் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
அடுத்த முக்கிய புனித நீராடல் நிகழ்ச்சி வரும் 29-ம் தேதி மவுனி அமாவாசை நாளில் ‘ஷாகி ஸ்நானம்’ என்ற பெயரில் நடைபெறுகிறது. அன்றைய தினம் 8 முதல் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பிப்ரவரி 3-ம் தேதி பசந்த் பஞ்சமி தினத்தில் 3-வது ஷாகி ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெருகிறது. பிப்ரவரி 12-ம் தேதி மாகி பூர்ணிமா தினம், பிப்ரவரி 26 மகா சிவராத்திரி ஆகிய தினங்களில் முக்கிய புனித நீராடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அத்துடன் மகா கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைகிறது.
சிறப்பு ஏற்பாடு: மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள் காணாமல் போனால் அவர்களை எளிதில் கண்டறிய இங்கு அமைக்கப்பட்டுள்ள 50,000 மின் கம்பங்களில் க்யூ.ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. இதை செல்போனில் ஸ்கேன் செய்தால் காணாமல் போனவர்களின் இருப்பிடத்தை எளிதில் கண்டறியலாம்.
பரிசோதனை கூடம்: மகா கும்பமேளாவில் தரமான உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய நடமாடும் உணவு பரிசோதனை கூடங்களும் உள்ளன. இங்கு உணவுப் பொருட்களின் தரம் பரிசோதிக்கப்படுகின்றன.
வெப்ஆப் வசதி: மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்துக்கு எளிதில் சென்று திரும்புவதற்கான வழிகள் மற்றும் தகவல்களை https://kumbhlocator.esri.in/. என்ற இணையதள ஆப் தொடங்கப்பட்டுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இதில் வழிகாட்டு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT