Published : 13 Jan 2025 02:09 AM
Last Updated : 13 Jan 2025 02:09 AM
இந்த ஆண்டில் பார்க்க வேண்டிய முதல் 52 இடங்கள் பட்டியலில் அசாம் மாநிலம் 4-ம் இடம் பிடித்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் அழகு, உயர்வான கலாச்சாரம், பசுமையான தேயிலை தோட்டங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள அசாம் மாநிலம், இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவம் கிடைப்பது நிச்சயம்.
இந்நிலையில், இந்த ஆண்டில் உலக அளவில் சுற்றிப் பார்க்க வேண்டிய முதல் 52 இடங்களின் பட்டியலில் அசாம் 4-ம் இடத்தைப் பிடித்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள மலைப் பிரதேசமான அசாம், வடகிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. கலாச்சார தனித்துவம் மற்றும் இயற்கை அழகுக்கு பெயர் பெற்று விளங்குகிறது அசாம். “பச்சை தேயிலை தோட்டங்கள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்தின் நிலம்” என நியூயார்க் டைம்ஸ் புகழாரம் சூட்டி உள்ளது.
உலகப் புகழ்பெற்ற தேயிலை தோட்டங்கள் மற்றும் காசிகரங்கா தேசிய பூங்கா ஆகியவையும் அசாம் மாநிலத்தில்தான் அமைந்துள்ளன. இந்த பூங்கா அருகி வரும் காண்டாமிருகங்களின் சரணாலயமாக விளங்குகிறது.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், பிரிட்டனின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஜேன் ஆஸ்டென்’ஸ் இங்கிலாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஈக்குவடாரில் உள்ள கலபகோஸ் தீவுகள் 2-ம் இடத்தையும் நியூயார்க் சிட்டி அருங்காட்சியகம் 3-ம் இடத்தையும் தாய்லாந்தின் ஒயிட் லோட்டஸ் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT