Published : 08 Jan 2025 03:00 AM
Last Updated : 08 Jan 2025 03:00 AM
இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில். இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
பாரத மண்டபத்தில் இந்த சேவையை தொடங்கி வைத்து அமித் ஷா பேசியதாவது: வெளிநாட்டுக்கு தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க, இந்திய விசாரணை அமைப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்தே, இண்டர்போல் போன்று பாரத்போல் போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய புலானாய்வு அமைப்பு (சிபிஐ) உருவாக்கியுள்ள இந்த போர்ட்டலின் மூலம் சர்வதேச முகமைகளின் உதவியை உடனடியாக கோர முடியும்.
மேலும், இந்த போர்ட்டலில் மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகள் எளிதாக இண்டர்போல் உடன் இணைக்கப்பட்டு விசாரணையை துரிதப்படுத்த முடியும்.
இந்தியாவில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன்பிறகு வெளிநாடுகளில் தஞ்சமடையும் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த நவீன தொழி்நுட்பங்களை நமது முகமைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது.
உலகளவில் எழும் சவால்களை கண்காணித்து நமது உள் அமைப்பு முறையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பாரத்போல் அந்த திசையின் ஒரு படியாகும். 195 உறுப்பு நாடுகளைக் கொண்ட இண்டர்போல் அமைப்பிலிருந்து மத்திய மற்றும் மாநில விசாரணை முகமைகள் தங்கள் வழக்குகளுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய பாரத்போல் போர்ட்டல் இணைப்பு பாலமாக செயல்படும்.
பாரத்போல் அமைப்பின் செயல்பாடு மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான திறன் மேம்பாட்டுக்காக மாநிலங்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை சிபிஐ ஏற்க வேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT