Published : 07 Jan 2025 06:22 PM
Last Updated : 07 Jan 2025 06:22 PM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவளித்துள்ளார். இதன்மூலம், காங்கிரஸுக்கு சமாஜ்வாதி கட்சி அதிர்ச்சி அளித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை இன்று (ஜன.7) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியுடன் இணையாமல், டெல்லியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இச்சூழலில், இண்டியா கூட்டணியின் மற்றொரு கட்சியான சமாஜ்வாதி, காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
டெல்லியில் ஒரு தொகுதியிலும் சமாஜ்வாதி போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. அதேசமயம், பாஜகவை தோல்வியுறச் செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ஆதரவை ஆம் ஆத்மி கட்சிக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி, உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டது. இதன் பலன் இரண்டு கட்சிகளுக்குமே கிடைத்திருந்தன. உ.பியில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் சமாஜ்வாதி 62, காங்கிரஸ் 17 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒன்றில் போட்டியிட்டன. இதில், சமாஜ்வாதி 37, காங்கிரஸ் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றன.
உ.பியில் கணிசமான தொகுதிகளை பெற்ற இக்கூட்டணி டெல்லியில் கூட்டணி சேரவில்லை. சமாஜ்வாதி விலகிய தகவல் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சமீபத்தில் முடிந்த மகராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் இண்டியா கூட்டணியின் உறுப்பினர்கள் காங்கிரஸிடமிருந்து விலகத் துவங்கி உள்ளன. ஆம் ஆத்மி, சமாஜ்வாதி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ராகுல் காந்தி மீது கேள்வி எழுப்பியிருந்தன.
இப்போது டெல்லி தேர்தலில் விலகி, ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதன் மூலம், சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகத் தகவலை தெரிவித்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், 2027-ம் ஆண்டில் வரவுள்ள உ.பி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிட வேண்டி வரும்.
மாயாவதியின் பிஎஸ்பி: இதனிடையே, உ.பியின் மற்றொரு எதிர்கட்சியான பகுஜன் சமாஜ், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சியின் நிர்வாகக் குழு கூடி ஐந்து தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக முடிவு எடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT