Published : 06 Jan 2025 05:32 PM
Last Updated : 06 Jan 2025 05:32 PM
புதுடெல்லி: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், மாவட்ட ரிசர்வ் காவல் படை வீரர்களின் வாகனத்தை நக்சல்கள் வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்ததில் 8 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஓட்டுநரும் உயிரிழந்தார்.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் பின்னர் தங்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். குத்ரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேலி கிராமத்திற்கு அருகில் வாகனம் வந்தபோது, வெடிகுண்டு வெடித்ததில் மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் 8 பேரும், ஒரு ஓட்டுநரும் உயிரிழந்ததாக காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பஸ்தர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு முன், ஏப்ரல் 26, 2023 அன்று, அண்டை மாவட்டமான தண்டேவாடாவில் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற வாகனத்தை நக்சல்கள் வெடிக்கச் செய்ததில் 10 வீரர்களும், ஒரு ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் (ஜன.4) தண்டேவாடாவில் நடந்த என்கவுன்டரில் 4 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கரின் நாராயண்பூர் - தண்டேவாடா மாவட்டங்களின் வனப்பகுதியான அபுஜ்மார் வனப்பகுதியில் உலவும் நக்சல்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் வன பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து AK-47 துப்பாக்கி மற்றும் SLR துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT