Published : 24 Dec 2024 05:43 PM
Last Updated : 24 Dec 2024 05:43 PM

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய விவகாரம்: காங்கிரஸ் மீது மகாராஷ்டிரா, உ.பி. முதல்வர்கள் சாடல்

நாக்பூர்: நாடாளுமன்ற நேரத்தை வீணடித்ததற்காக காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், "அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தை திருத்தி அரசியல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை கெடுத்துவிட்டனர். அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜவஹர்லால் நேரு முதல் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி வரை அரசியல் சாசனத்தை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்தது எப்படி... காங்கிரஸ் தலைவர்கள், எப்படி இருந்து வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்ததை அடுத்து காங்கிரஸ் விரக்தியடைந்துள்ளது. நேரு முதல் ராகுல் காந்தி வரை, தொடர்ந்து அரசியல் சாசனத்தை அவமதித்து, இடஒதுக்கீட்டை மறுத்து, விரக்தியில், பாபா சாகேப்பை தொடர்ந்து அவமதித்த அதே காங்கிரஸ் தான் இப்படி நடந்து கொள்கிறது" என தெரிவித்தார்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் அவ்வப்போது பாபா சாகேப் அம்பேத்கரை அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், நெறிமுறைகளுக்கு புறம்பாகவும் அவமதித்ததை எடுத்துக்கூறுவதே இந்த செய்தியாளர் சந்திப்பின் நோக்கம். நாட்டின் சுதந்திரத்துக்காகவும், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திற்காகவும் பாபா சாகேப் முக்கியப் பங்காற்றினார். அவர் மீது ஒவ்வொரு இந்தியருக்கும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. அம்பேத்கரின் கனவுப்படி நாட்டை கட்டியெழுப்ப பாரதிய ஜனதா கட்சி உழைத்து வருகிறது. பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு பாரதீய ஜனதா கட்சி மரியாதை அளித்துள்ளது.

நாட்டில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை அவமதித்த வரலாறு காங்கிரஸுக்கு உண்டு. (சிறுபான்மையினரை) தாஜா செய்யும் அரசியல் காரணமாக தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை முற்றிலுமாக நிறுத்த முயன்ற வரலாறு காங்கிரசுக்கு உண்டு. தாஜா செய்யும் அரசியல் காரணமாக நாட்டை பிரிவினையின் விளிம்பிற்கு கொண்டு வந்த கட்சி காங்கிரஸ். பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையின் ஒரு பகுதியாக இருப்பதை ஜவஹர்லால் நேரு விரும்பவில்லை.

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் தாக்கப்பட்டதை நாடு கண்டுள்ளது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கூற விரும்புகிறோம். இந்த நடத்தை அரசியல் சாசனமாக கருதப்படுமா? காங்கிரஸ் கட்சியின் நடத்தை அரசியல் சாசனமாக கருதப்படுமா? இரண்டு பாஜக எம்.பி.க்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர், வயதான எம்.பி.. அவர் தள்ளப்பட்டு கீழே விழ வைக்கப்படுகிறார்.

வயதானவர்களைத் தள்ளும் செயல் உட்பட அவர்கள் தங்கள் எல்லா செயல்களையும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக ஆக்க முயற்சிக்கிறார்கள். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் நலன் அல்லது பெண்கள் நல மசோதாக்கள் ராகுல் காந்தியால் கிழிக்கப்படும் போது, ​​இந்த நடத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா? பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரை அவமதிப்பது காங்கிரசின் இயல்பு... அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்... காங்கிரஸ் கட்சியை மக்கள் தொடர்ந்து நிராகரித்துள்ளனர், எதிர்காலத்திலும் அவர்களை நிராகரிப்பார்கள்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x