Published : 21 Dec 2024 12:24 PM
Last Updated : 21 Dec 2024 12:24 PM
புதுடெல்லி: அம்பேத்கர் குறித்த தனது கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்பப் பெற வலியுறுத்தி டிச.24ல் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “நாட்டின் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் சுயமரியாதை, மனித உரிமை, மனிதநேயம் மற்றும் நலனுக்காக அரசியல் சாசனத்தின் அசல் புத்தகத்தை எழுதியவர். கடவுளைப் போல அவர் மதிக்கப்படுகிறார். அவரை அமித் ஷா அவமரியாதை செய்தது மக்களின் மனதை புண்படுத்துகிறது.
மாமனிதரான அம்பேத்கர் பற்றி அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தைகளால், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் மிகுந்த வருத்தமும், கோபமும், கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். இந்த பின்னணியில், அமித் ஷா தான் கூறியதை திரும்பப் பெற்று, மனந்திரும்ப வேண்டும் என்று அம்பேத்கரிய பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுத்தது. அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 24 அன்று நாடு தழுவிய இயக்கத்தை நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. அன்றைய தினம், நாட்டின் அனைத்து மாவட்ட தலைநரங்களிலும் முற்றிலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும்.
தலித்துகள் தங்கள் சொந்தக் காலில் நிற்கவும் சுயமரியாதையுடன் வாழவும் வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் போராடி, அவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல சட்ட உரிமைகளை வழங்கியவர் அம்பேத்கர்.
காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளால் பாபா சாகேப்பை முழு மனதுடன் மதிக்க முடியவில்லை என்றால், அவர்களும் அவரை அவமதிக்கக் கூடாது. அம்பேத்கரால் SC, ST மற்றும் OBC வகுப்பினருக்கு அரசியலமைப்பில் சட்டப்பூர்வ உரிமைகள் என்று கிடைத்ததோ அன்றே அவர்களுக்கு ஏழு பிறவிகளுக்கு சொர்க்கம் கிடைத்தது.” என தெரிவித்துள்ளார்.
அமித் ஷா பேசியது என்ன?: மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசியல் சாசனம் குறித்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்.” எனப் பேசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT