Published : 11 Dec 2024 01:40 AM
Last Updated : 11 Dec 2024 01:40 AM
'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி கும்பலின் தலைவன் கம்ரன் ஹைதரை 2,500 கி.மீ. விரட்டி சென்று என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது. பொதுமக்களை வீடியோ காலில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களை சிபிஐ, போலீஸ், வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொள்கின்றனர். போதை பொருள் கடத்தல், நிதி மோசடி, வரிஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறி, அப்பாவி மக்களை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்திருப்பதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
சீனா, தைவான், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட 'டிஜிட்டல் அரெஸ்ட்' கும்பல்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 'வெளிநாட்டு வேலை' என்ற பெயரில் இளைஞர்கள் தேர்வு செய்து தைவான், தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்புகின்றனர். இந்த இளைஞர்கள் மூலமே 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி அரங்கேற்றப்படுகிறது.
இதுதொடர்பாக டெல்லியை சேர்ந்த நரேஷ் என்பவர் போலீஸில் அண்மையில் புகார் அளித்தார். அதில், "அலி இன்டர்நேஷன் என்ற நிறுவனம் தாய்லாந்துக்கு என்னை வேலைக்கு அழைத்து சென்றது. அங்கு சீன நிறுவனத்தின் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி கும்பலில் பணியாற்ற நிர்பந்தம் செய்யப்பட்டேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தியது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த கம்ரன் ஹைதர் என்பவர் இந்தியாவில் இருந்து தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு இளைஞர்களை ஏமாற்றி அனுப்புவது விசாரணையில் தெரியவந்தது. அவரை பிடிக்க மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டனர். சுமார் 2,500 கி.மீ. தொலைவுக்கு அவர்கள் சுற்றி அலைந்தனர். இறுதியில் ஹைதராபாத் ரயில் நிலையத்தில் கம்ரன் ஹைதர் கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, “மன்சூர் ஆலம், சாகில், ஆசிஷ் பவன் யாதவ் ஆகியோருக்கும் ஆள்கடத்தலில் தொடர்பு இருக்கிறது. அவர்களையும் தீவிரமாக தேடி வருகிறோம். வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் மோசடி கும்பல்களிடம் ஏமாற வேண்டாம்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT