Published : 19 Nov 2024 02:33 AM
Last Updated : 19 Nov 2024 02:33 AM
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியின் புகழை கெடுக்க, வெளிநபர்கள் மூலம் பாஜக ரகசிய பிரச்சாரம் செய்வதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக ஊடகங்களில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் மாநில அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறி இரு வழக்குகளை ஜார்க்கண்ட் போலீஸார் ஏற்கெனவே பதிவு செய்தனர்.
இதையடுத்து தனக்கு எதிராக பாஜக நிழல் பிரச்சாரம் மேற்கொள்கிறது என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டினார். சர்வாதிகாரர்களிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அதன் மூலம் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் மூலமாக நிழல் பிரச்சாரம் மேற்கொண்டு நியாயமற்ற முறையில் வெற்றி பெற பாஜக முயற்சிப்பதாக கூறியிருந்தார். ஜேஎம்எம் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய 95,000 வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு எதிராக வெளியாட்கள் மூலம் ரகசிய பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டுள்ளதாக முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பிஹார், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து வெளிநபர்களை அழைத்து வந்து அவர்கள் மூலம் தெருக்களில் ரகசிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் தெரு முனைகளில் நின்று ஜேஎம்எம் அரசுக்கு எதிராக பொய்களை பேசி வாக்காளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்துன்றனர்.
இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.1 கோடி செலவிடப்படுகிறது. நாங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாகவும், போலி மருந்துகள், போலி தடுப்பூசிகள் மூலமாகவும் நன்கொடை பெறவில்லை. அதனால் ஜார்க்கண்ட் மக்கள் எனக்காக வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT