Published : 16 Aug 2014 05:49 PM
Last Updated : 16 Aug 2014 05:49 PM
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரர்கள் மீது சனிக்கிழமை தீவிர வாதிகள் நடத்திய திடீர் தாக்கு தலில் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரில் இருந்து 33 கி.மீ. தொலைவில், புல்வாமா மாவட்டம், அவந்திபோரா என்ற இடத்தில் இந்திய விமானப் படைத் தளம் உள்ளது. இதன் பாதுகாப்பு பொறுப்பை எல்லை பாதுகாப்பு படையின் 165-வது பட்டாலியன் ஏற்றுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல், பணிநேர (ஷிப்ட்) மாற்றுத்துக்காக பிஎஸ்எப் வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் விமான தளத்துக்கு வெளியே இவர்களின் வாகனம் மீது தானியங்கி துப்பாக்கிளால் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.யாதவ், தலைமைக் காவலர் எஸ்.யாதவ் ஆகிய இருவர் உயிரிழந்தனர். தலைமைக் காவலர் ஜெய்பிரசாத், காவலர்கள் அமர் பகதூர், பி.சிங், வினோத் குமார் ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த பிற வீரர்கள் தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர். ஆனால் அதற்குள் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து அங்கு ராஷ்ட்ரீய ரைபில்ஸ் மற்றும் பி.எஸ்.எப். வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் பணி நடந்துவருகிறது.
காயமடைந்த பிஎஸ்எப் வீரர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆகஸ்ட் 11-க்குப் பிறகு இந்திய வீரர்கள் மீதான 4-வது மற்றும் பி.எஸ்.எப். மீதான 2-வது தாக்குதல் இதுவாகும்.
கடந்த 11-ம் தேதி பி.எஸ்.எப். வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். மறுநாள் ரயில்வே பாதுகாப்பு படை காவலரை சுட்டுக்கொன்றனர்.
கடந்த வியாழக்கிழமை, கலந்தர் என்ற இடத்தில் போலீஸ் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸார், 1 சிவிலியன் உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT