Published : 30 Oct 2024 03:14 PM
Last Updated : 30 Oct 2024 03:14 PM

‘அரசியலாக்குவது சரியில்லை’: ஆயுஷ்மான் பாரத் குறித்த பிரதமரின் குற்றச்சாட்டுக்கு கேஜ்ரிவால் பதில்

அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்

புதுடெல்லி: "தேசிய தலைநகரின் பொது சுகாதாரப் பிரச்சினையில் பிரதமர் மோடி அரசியல் செய்கிறார்" என்று டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுத்து வருகிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து கேஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.

உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இணையவில்லை. அரசியல் காரணங்களுக்காக அம்மாநில ஆளும் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன. அரசியல் காரணங்களுக்காக தங்கள் மாநிலத்தின் சொந்த மூத்த குடிமக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுவது மனித நேயத்துக்கு எதிரானது.” என தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த குற்றச்சாட்டுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் தனது எஸ்க் பக்கத்தில் நீண்ட பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய பிரதமரே, மக்களின் சுகாதார பிரச்சினையில் தவறாக பேசுவது சரியில்லை. இந்த விஷயத்தில் அரசியல் செய்வதும் சரியில்லை.

டெல்லி அரசின் மருத்துவத்திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள ஒவ்வொருவரும் முழு சிகிச்சையையும், அது எவ்வளவு செலவானாலும் அதனை முற்றிலும் இலவசமாக பெறுகிறார்கள். ஐந்து ரூபாய் மாத்திரை முதல் ஒரு கோடி ரூபாய் சிகிச்சை வரை டெல்லி அரசு அதன் ஒவ்வொரு குடிமக்களுக்கும் இலவசமாக வழங்குகிறது. நீங்கள் சொன்னால் இந்த திட்டத்தின் கீழ் பலனடைந்த லட்சம் பயனாளிகளின் பட்டியலை உங்களுக்கு நான் அனுப்பி வைக்கிறேன்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் மக்கள் பலனடைந்துள்ளார்களா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிஏஜி பல முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் மாநிலங்களில், இந்தநாள் வரை ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பலனடைந்தவர்கள் ஒருவரைக் கூட நான் சந்திக்கவில்லை. டெல்லி மாதிரியை படித்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு பதிலாக டெல்லி மாதிரியை நாடு முழுவதும் அமல்படுத்துங்கள் என்று நான் உங்களை வேண்டுகிறேன். இதனால் களத்தில் மக்கள் பலனடைவார்கள். இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x