Published : 27 Sep 2024 08:57 AM
Last Updated : 27 Sep 2024 08:57 AM

தமிழகப் பயணிகளுடன் குஜராத் பாவ்நகரில் வெள்ளத்தில் சிக்கிய சொகுசுப் பேருந்து

வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டுப் பேருந்து

பாவ்நகர்: குஜராத் மாநிலம் பாவ்நகரில் தமிழக யாத்ரீகர்களுடன் சொகுசுப் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. சொகுசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பயணிகளை மீட்க ட்ரக் ஒன்று மீட்புக் குழுவினருடன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ட்ரக்கும் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து பயணிகளை வெளியேற்றி ட்ரக்கில் ஏற்றினர். மீட்புப் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் மேற்பார்வை செய்தார்.

குஜராத்தில் கனமழை காரணமாக திடீரெ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தான் அந்த சொகுசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. விஷயம் அறிந்து மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சக்திசின்ஹா கோஹில், பயணிகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எக்ஸ் தளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையில், பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். ஆனால் வெள்ளம் வடிந்ததும் அவர்கள் ட்ரக் மூலம் கரைக்கு அழைத்துவரப்படுவர் என அரசுத் தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேருந்தில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க நிஷ்கலான்க் மஹாதேவ் கோயிலுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தனர். கோயில் அமைந்துள்ள கோலியாக் கிராமம் பாவ்நகர் டவுனில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. வழியில் உள்ள தரைப் பாலத்தைக் கடக்கும் போது வெள்ளம் சூழ்ந்து பேருந்து அதில் சிக்கிக் கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x