Published : 26 Aug 2024 05:19 AM
Last Updated : 26 Aug 2024 05:19 AM
புதுடெல்லி: அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள், அரசியலில் கால் பதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்' வானொலிநிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 113-வது ‘மனதின் குரல்' நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும்என்று ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் இருந்து அழைப்பு விடுத்தேன். இதுதொடர்பாக ஏராளமான இளைஞர்கள் கடிதங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக கருத்துகளை தெரிவித்து உள்ளனர். குடும்ப அரசியல் என்பது புதிய திறமைகளை அழித்து விடுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேசப்பற்றுடன் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு எவ்வித அரசியல் பின்னணியும் கிடையாது. பாரதத்தின் சுதந்திரத்துக்காக அவர்கள் துணிச்சலாக போராடினர்.
இன்றைய சூழலில் இதே உணர்வு தேவைப்படுகிறது. அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். புதிய இளைஞர்களின் வருகையால் தேசத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முடியும்.
சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்றும் இயக்கம், இந்த ஆண்டும் வெற்றிகரமாக நடைபெற்றது. நீர், நிலம், வானத்தில் தேசிய கொடி பறந்தது. இந்த இயக்கம் தேசம் முழுவதையும் ஒன்றிணைத்தது.
ஆகஸ்ட் 19-ம் ரக்சா பந்தன் மற்றும் உலக சம்ஸ்கிருத தினத்தை கொண்டாடினோம். உலகின் பல்வேறு நாடுகளில் சம்ஸ்கிருதம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஐரோப்பாவின் லிதுவேனியாவை சேர்ந்த பேராசிரியர் வைடிஸ் விடூனஸ், ‘சம்ஸ்கிருதம் ஆன் தி ரிவர்ஸ்' (ஆற்றங்கரைகளில் சம்ஸ்கிருதம்) என்றபெயரில் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அவரது தலைமையிலான குழு, நேரிஸ் ஆற்றின் கரையில் கூடி வேதங்களை ஓதி வருகின்றனர். இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுகிறேன்.
அடுத்தடுத்த நாட்களில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, தெலுங்கு மொழி தினம் உள்ளிட்டவை கொண்டாடப்பட உள்ளன. அதற்காக முன்கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
'அம்மாவின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கம் பற்றி மீண்டும் நினைவூட்டுகிறேன். இதில் அனைவரும் பங்கேற்று அதிக அளவிலான மரக்கன்றுகளை நட வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல்: ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடினோம். கடந்த ஆண்டு இதே நாளில் சந்திரயான்-3, நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் தரையிறங்கியது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் சூயஷ், டேனியல், ரக்சித், கிஷன், பிரணீத் ஆகியோர் ‘கேலக்ஸி ஐ' என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள், பிரதமர் மோடியிடம் கூறியதாவது:
உங்களது ஆட்சியில் விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை நாங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டோம். எங்களது விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் பாரதத்தின் எல்லைப் பகுதிகள், கடல் பகுதிகளை கண்காணிக்க முடியும். இதன்மூலம் ராணுவத்துக்கு தேவையான தகவல்களை வழங்குவோம். பாரதத்தின் விவசாயிகளுக்கு தேவையான தகவல்களையும் வழங்குவோம்.
இவ்வாறு ஐஐடி முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT