Published : 16 Aug 2024 04:38 PM
Last Updated : 16 Aug 2024 04:38 PM
அமராவதி: ஆந்திரப் பிரதேச அரசின் பொருளாதார வளர்ச்சிக் குழுவின் இணை தலைவராக டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், அவரது மகனும் அமைச்சருமான நர லோகேஷும் ஆந்திரப் பிரதேச தலைநகர் அமராவதியில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரனை சந்தித்துப் பேசினர். இதனையடுத்து சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனது பழைய நண்பரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான நடராஜன் சந்திரசேகரனுடன் இன்று அமராவதியில் ஒரு சிறப்பான சந்திப்பு நடத்தினேன்.
அறிவுஜீவிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பொருளாதார மேம்பாட்டுக்கான பணிக்குழுவை ஆந்திரப் பிரதேச அரசு உருவாக்குகிறது. 2047ம் ஆண்டுக்குள் ஸ்வர்ண ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பணிக்குழுவின் இணைத் தலைவராக என். சந்திரசேகரன் இருப்பார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்திய தொழிற் கூட்டமைப்பு அமராவதியில் அமைக்க உள்ள போட்டித்தன்மைக்கான உலகளாவிய தலைமைத்துவ மையத்தின் (Global Leadership on Competitiveness-GLC) பங்குதாரராக இருக்க டாடா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வைசாக்கில் TCS இன் மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்கான வாய்ப்பு, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவுடன் ஆந்திரப் பிரதேசத்தின் விமான இணைப்பை மேம்படுத்துதல் உள்பட பல துறைகளில் எவ்வாறு கூட்டாக இணைந்து செயல்படுவது என்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர அமைச்சர் நர லோகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ஆந்திரப் பிரதேசம் மீண்டும் முதலீட்டாளர்களுக்கு உகந்த இடமாக உருவாகி வருகிறது. இன்று, டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரனைச் சந்தித்து, விசாகப்பட்டினத்தில் TCS இன் வளர்ச்சி மையம் உட்பட, நமது மாநிலத்தில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்திய தொழிற் கூட்டமைப்பு அமராவதியில் அமைக்க உள்ள போட்டித்தன்மைக்கான உலகளாவிய தலைமைத்துவ மையத்தின் பங்குதாரராக இருக்க டாடா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT