Published : 26 Apr 2024 02:00 PM
Last Updated : 26 Apr 2024 02:00 PM
போபால்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சிறுபான்மையினருக்கான சமரச அரசியலைக் கையில் எடுத்துள்ளதால், அது வெளியாகியதில் இருந்தே மக்களின் கவனம் பாஜக மீது இன்னும் அதிகமாகக் குவிந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெகுவாக சாடியுள்ள அமித் ஷா, இந்த நாடு இனி ஷரியா (இஸ்லாமிய) சட்டத்தால்தான் இயங்குமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்துக்கு அமித் ஷா அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானதில் இருந்து மக்கள் பாஜகவின் பக்கம் திரும்புவது மேலும் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது பழைய சித்தாந்தமான ‘சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும்’ அரசியலை அதன் தேர்தல் அறிக்கையிலும் தொடர்ந்துள்ளது. அதனால், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சூழலில், நாட்டின் வளம் மற்றும் பாதுகாப்புக்காகவும் ஏழைகளின் நலனுக்காவும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சிக்கு வாக்களிக்குமாறு நான் மக்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தனிப்பட்ட சட்டங்களை முன்னெடுப்பது பற்றி பேசுகிறது. இந்த நாடு இனி இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தின்படி செயல்பட வேண்டுமா? என்று நான் ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். நமது அரசியலமைப்பு மதச்சார்பற்றது. இந்த நாட்டின் சட்டங்கள் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை.
நாங்கள் முத்தலாக் சட்டத்தை ரத்து செய்துவிட்டு பொது சிவில் சட்டத்தினை தொடங்கினோம் அதனை முன்னெடுத்தும் செல்வோம். ஆனால், ராகுல் காந்தி தனிப்பட்ட சட்டங்களைப் பற்றி பேசுகிறார். அது நாட்டை பிளவுபடுத்திவிடும். இந்த நாட்டில் தனிப்பட்ட சட்டங்களை ஒருபோதும் அமல்படுத்த முடியாது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமர் ஆவதை நாம் பார்க்கப்போகிறோம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சி நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தவும், மக்களின் வளங்களை மறுபங்கீடு செய்யவும் திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டினார். அம்ரோஹாவில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத், “அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்காக தனிப்பட்ட சட்டத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஷரியா சட்டத்தை அமல்படுத்தி இந்தியாவில் தலிபான் முறையிலான ஆட்சியை அமல்படுத்த முயற்சி செய்கிறது. இது பாபா சாகேப் உருக்கிய இந்திய அரசியல் சட்டத்துக்கு காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருப்பதை தெளிவாக உணர்த்துகிறது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT