Published : 07 Aug 2014 02:45 PM
Last Updated : 07 Aug 2014 02:45 PM
கடந்த 1997-ல் தனது 6-வது வயதில் ஒரு ரயில் பயணத்தின்போது எதிர்பாராதவிதமாக காணாமல்போன பாட்னாவைச் சேர்ந்த ஒரு பெண், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கூகுள் உதவியுடன் தன்னுடைய பெற்றோருடன் இணைந்திருக்கிறார்.
ஒரு சினிமாவைப் போல நிகழ்ந்துள்ள இச்சம்பவம், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிஹாரின் பரோனி ரயில் நிலையத்தில் குடியா என்ற சிறுமி 1997-ம் ஆண்டு காணாமல் போனார். அப்போது, அவரால் இந்தி மொழி மட்டுமே பேசமுடியும். ஆனால், 17 ஆண்டுகள் கழித்து இன்று தனது பெற்றோருடன் சேர்ந்துள்ள அவருக்கு, அஸ்ஸாமி மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.
குடியா காணாமல்போனபோது குழந்தைகள் காப்பகத்தில் கொண்டுச் செல்லப்பட்டார். அவரால் தனது பெற்றோர்களின் விவரம் குறித்து சரிவர கூறமுடியவில்லை. ஆயினும், தனது மாமா ஒருவர், பாட்னாவில் உள்ள தனது வீட்டருகே உள்ள பிஸ்கெட் தொழிற்சாலையில் வேலை செய்ததாக மட்டுமே நினைவிருப்பதாக அப்போது தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் அதிகாரி நீலாட்சி சர்மா என்பவர் குடியாவின் பெற்றோர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எல்லா வகையிலும் தேடி முயற்சித்திருக்கிறார்.
"கடந்த மாதம் குடியாவும் அவரது கணவரும், குடியாவின் பெற்றோரைத் தேடி பாட்னாவுக்கு சென்றனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நான் ஏதேச்சையாக குடியாவைச் சந்திக்க நேர்ந்தது. பின், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். அவரது பெற்றோரைத் தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
"நான் பல மணிநேரம் கூகுளில் தேடினேன். ஒரு நாள் குடியாவின் மாமா பணிபுரிந்த பிஸ்கட் தொழிற்சாலையின் தொலைபேசி எண் கிடைத்தது. அங்கு தொடர்பு கொண்டு, குடியாவின் பெற்றோரைக் கண்டுபிடித்தோம்.
தற்போது அவர்களைச் சேர்த்து வைத்துள்ளேன். எனது முயற்சியில் வெற்றிபெற்றுள்ளேன். கூகுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என்று நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார் நீலாட்சி சர்மா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT