Published : 25 Mar 2024 05:16 PM
Last Updated : 25 Mar 2024 05:16 PM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிரபல நடிகை கங்கனா ரணாவத் இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் களம் காண்கிறார். இது கங்கனாவின் சொந்த ஊர் என்பதால் எளிதாக ஜெயித்து விடலாம் என பாஜக கணித்துள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கங்கனா ரணாவத் இந்தத் தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா? தற்போது அந்தத் தொகுதி யார் வசம் உள்ளது? - இதோ ஒரு விரைவுப் பார்வை.
வெல்வாரா கங்கனா ரணாவத்?: பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயர்களை ஐந்து கட்டமாக வெளியிட்டிருக்கிறது பாஜக. இதில் ஆந்திரா, பிஹார், கோவா, குஜராத், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கான 111 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் ஹாமிர்பூர், மண்டி, ஷிம்லா, கங்கரா என 4 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன.
இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத் இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இது கங்கனாவின் சொந்த ஊர் என்பதால் சுலபமாக ஜெயித்து விடலாம் என பாஜக கணித்துள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2004, 2009, 2013-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங், பிரதீபா சிங் வெற்றி பெற்றனர். கடந்த 2019 தேர்தலில் இந்த 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. பாஜக சார்பில் ராம் ஸ்வரூப் சர்மா வெற்றி பெற்றார். இவர் கடந்த 2021-ல் இறந்தார். தூக்கில் தொங்கிய நிலையில் டெல்லி இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து மீண்டும் மண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரதீபா சிங் வெற்றி பெற்றார். இவர் மறைந்த ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி ஆவார். வரும் தேர்தலிலும் பிரதீபா சிங் தான் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் கங்கனா ரணாவத்துக்கு கடும் போட்டி நிலவலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கு முன்பு கங்கனாவை பற்றி பார்ப்போம்.
யார் இந்த கங்கனா ரணாவத்? - இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ரணாவத் தனது பதினாறு வயதில் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். அதன் பிறகு சிறிது காலத்துக்கு மாடலிங்கில் ஈடுபட்டார். இதையடுத்து, அவர் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்து தியேட்டரில் சேர்ந்தார். அங்கு அவர் நாடக இயக்குநர் அரவிந்த் கவுரின் கீழ் பயிற்சி பெற்றார். தியேட்டர் பார்வையாளர்களிடமிருந்து தனது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், பாலிவுட்டில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பினார். இதனையடுத்து, நான்கு மாத ஆக்டிங் கிளாஸில் சேர்ந்து படித்தார்.
இவர் தமிழில் ‘தாம் தூம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்தி திரையுலகில் மட்டுமன்றி, சினிமாவில் பொதுவாக நடக்கும் அரசியலிலும் தலையிட்டு தனது கருத்துகளை கூறி வருகிறார். அவ்வப்போது பொது அரசியலும் பேசுவார். அவர் நான்கு தேசிய திரைப்பட விருதுகள், ஐந்து ஃபிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் 2020-இல், நாட்டின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் கங்கனா ஆறு முறை இடம்பெற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியான இவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள் டெல்லியில் பெரிய போராட்டம் நடத்தியபோது, அவர்களை 'பயங்கரவாதிகள்' என்று கூறி சர்சையில் சிக்கினார். மேலும் சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழி என்றார். இந்தியா என்பது அடிமைகளின் பெயர். அதனை 'பாரதம்' என்று மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இவ்வாறு சர்ச்சை நாயகியாகவே வலம் வந்தார். தற்போது பாஜகவின் அதிகாரபூர்வ எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திரையுலகில் கொடி கட்டி பறக்கும் கங்கனா, அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதிப்பாரா என்பதை தேர்தல் களம் தான் தீர்மானிக்கப்போகிறது.
மோடிக்கு புகழாரம்: வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் பேசிய கங்கனா ரணாவத், “பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கிறது. அதற்காக அவருக்கு நன்றி. நான் என்னை சூப்பர் ஸ்டாராகவோ, நடிகராகவோ கருதவில்லை. அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். நான் கட்சியின் எளிய தொண்டர். கட்சி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடப்பேன்.
மண்டி தொகுதியின் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்வோம். 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜகவின் இலக்குக்காக பாடுபடுவோம். உலகின் மிகவும் நேசிக்கக் கூடிய தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவரது அடிச்சுவட்டை பின்பற்றி நாங்கள் நடப்போம். பிரதமர் மோடியின் திட்டம்தான் எங்கள் திட்டம்.
ஒரு படை வீரரைப் போல் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்போம். நாங்கள் வெற்றி பெறப்போவது உறுதி. அதற்கு, எங்களது பெயரோ, உழைப்போ காரணமாக இருக்காது. பிரதமர் மோடியின் பணிகளே எங்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும்” என்று கங்கனா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்து வெளியான படம் 'தலைவி'. ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். அந்த வகையில் அரசியலில் ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி கங்கனா ரணாவத் வெற்றி பெறுவாரா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
முந்தைய பகுதி: ‘பூவரசன்’ நாயகி, மம்தாவின் நம்பிக்கை... - யார் இந்த ரச்சனா பானர்ஜி? | 2024 தேர்தல் கள புதுமுகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT