Published : 31 Aug 2014 10:28 AM
Last Updated : 31 Aug 2014 10:28 AM

உ.பி. இடைத்தேர்தலில் சோனியா, ராகுல் பிரச்சாரம் இல்லை

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற வுள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்யமாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு மக்களவை, 11 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர்களான சல்மான் குர்ஷித், குலாம் நபி ஆசாத், மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், ஜனார்தன் துவிவேதி, மோதிலால் வோரா, ஹரியாணா முதல்வர் பூபீந்தர் சிங் ஹுடா, நடிகை நக்மா மற்றும் நடிகர் ராஜ் பப்பர் ஆகியோரது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால் சோனியா, ராகுல் பெயர்கள் இதில் இடம்பெறவில்லை.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் கூறும்போது, “எங்கள் கட்சியின் மரபுப்படி, முக்கியத் தலைவர்கள் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதில்லை. அந்த வகையில், சோனியாவும், ராகுலும் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார்கள். ஆகஸ்ட் 21-ல் நடைபெற்ற நான்கு மாநில இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் இவர்கள் செல்லவில்லை” என்றார்.

எனினும், கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவையின் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலில் முலாயம்சிங்கின் மருமகள் டிம்பிள் யாதவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் ராஜ் பப்பருக்காக ராகுல் பிரச்சாரம் செய்தார்.

உபியின் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கால் காலி செய்யப்பட்ட மெயின்புரி தொகுதியில் அவரது கொள்ளுப்பேரன் தேஜ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். இங்கு சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டு இல்லாவிட்டாலும், முலாயம் குடும்பத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் காங்கிரஸ் போட்டியிடவில்லை.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 11-ல் 10 சட்டசபை தொகுதிகளில், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் காலி செய்தவை ஆகும். மற்றொரு சட்டசபை தொகுதியும் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் தலைவரும் எம்.பி.யுமான அனு பிரியா பட்டேல் காலி செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x