Published : 03 Jul 2014 12:39 PM
Last Updated : 03 Jul 2014 12:39 PM
சுனந்தா புஷ்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி அமைக்க வற்புறுத்தல் எதுவும் இல்லை என்று 'எய்ம்ஸ்' நிர்வாகம் கூறிய நிலையில், அறிக்கையை மாற்ற தான் வற்புறுத்தப்பட்டதாகவும், அந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் டாக்டர் சுதிர் குப்தா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் தடய அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா கூறுகையில், "சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாற்றம் செய்யுமாறு என்னை யாரும் வற்புறத்தவில்லை என்பது எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு எப்படி தெரியும்? எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு தற்போது இது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி, விளக்கம் அளிக்குமாறு நிர்பந்தம் ஏன் வந்தது? ஆகிய கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும்.
எனது அனுபவத்தில் இது வரை நான் எத்தனையோ பிரேத பரிசோதனைகளை செய்துள்ளேன். ஆனால், சுனந்தா புஷ்கரின் விவகாரம் போல எதிலும் மன உளைச்சல் அடைந்ததில்லை. இதுவரை நான் நம்பகத்தன்மையான மருத்துவராகவே இருந்துள்ளேன். மருத்துவத் துறையின் கொள்கையயும் நடைமுறையையும் மீறி நடந்ததே இல்லை" என்று கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்தை இயற்கையானது என அறிக்கை தர, தன்னை சிலர் வற்புறுத்தியதாக ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் தடய அறிவியியல் பிரிவுத் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார் அளித்திருந்தார். புகாரில், தனக்கு வந்த மின்னஞ்சல் மிரட்டலையும் இணைத்து வழங்கியிருந்தார். ஆனால் இதற்கு எய்ம்ஸ் மறுத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT