Published : 28 Jul 2014 02:28 PM
Last Updated : 28 Jul 2014 02:28 PM
காங்கிரஸ் எப்போதும் மாணவர்களுக்கு துணை நிற்கும் என்று தன்னை சந்தித்த யு.பி.எஸ்.சி மாணவர்களிடம் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களில் திருத்தம் செய்யக் கோரி கடந்த சில நாட்களாக டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இந்நிலையில், டெல்லியில் இன்று யு.பி.எஸ்.சி. மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், சிசாட் (CSAT) தேர்வு நடைமுறையால் தாங்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் குறித்து ராகுல் காந்தியிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்களிடம் அவர்கள் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி எப்போதும் மாணவர்களுக்கு துணை நிற்கும். ஏழை மாணவர்களுக்கு அநீதி இழைக்க அனுமதிக்கப்படமாட்டாது. இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சரியான இடங்கள் அனைத்திலும் இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பும் என தெரிவித்ததாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அம்ரீஷ் ரஞ்சன் பாண்டே கூறியுள்ளார்.
யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் கடந்த 2011-ல் சிசாட் (CSAT) எனப்படும் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. ஆங்கிலத்தில் வினாத்தாள் இருப்பதால் இம்முறையான தேர்வு ஆங்கிலப் புலமை உள்ளவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும். இதனால் கிராமப்புற மாணவர்களுக்கும், இந்தி மற்றும் பிற மொழிகளில் படிப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படுகிறது என்பது மாணவர்கள் குற்றச்சாட்டு.
சிசாட் (CSAT) தேர்வு முறையில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து 3 பேர் கொண்ட குழு பரிசீலித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT