Published : 22 Jun 2023 05:02 AM
Last Updated : 22 Jun 2023 05:02 AM
புவனேஸ்வர்: கடந்த 2-ம் தேதி ஒடிசாவில், மூன்று ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 292 பேர் உயிரிழந்தனர். 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், விபத்து நடைபெற்ற பஹனகா கிராமத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் பார்வையிட்டார். அப்போது அவர், பஹனகா கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.2 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார்.
உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியும், ரயில்வே நிதியிலிருந்து ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் உள்ள பஹனகா அருகே தடம்மாறிச் சென்று சரக்கு ரயில் மீது மோதியது. இந்நிலையில், மற்றொரு தண்டவாளத்தில் எதிரே வந்துகொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது தடம்புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகள் மோதின. இதனால், ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி சில பெட்டிகளும் விபத்துக்கு உள்ளாகின.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பஹனகா கிராம மக்கள் ஈடுபட்டனர்.
அவர்களது இந்தப் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடியும் ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக்கும் பாராட்டினர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிடச் சென்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பஹனகா கிராம மேம்பாட்டுக்கு ரூ.2 கோடி நிதி அறிவித்துள்ளார்.
மக்களுக்கு நன்றி: இது குறித்து அவர் கூறுகையில், “பஹனகா கிராம மக்களின் சேவை உணர்வுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப் பணியில் அவர்கள் பெரும் பங்காற்றினர். மருத்துவமனை அமைப்பது உட்பட அந்தக் கிராமத்தின் மேம்பாட்டுக்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT