Published : 10 Jun 2023 03:17 PM
Last Updated : 10 Jun 2023 03:17 PM

ஒடிசா ரயில் விபத்து | சிபிஐ விசாரணை முடியும் வரை பஹானாவில் ரயில்கள் நிற்காது

கோப்புப்படம்

பாட்னா: நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து குறித்த சிபிஐ விசாரணை முடியும் வரை விபத்து நடந்த பஹானா ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பஹானா ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் அந்த வழியாக வந்த பெங்களூரு யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயிலும், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட இந்த கோர விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். 1,200 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசாரணை முடியும் வரை விபத்து நடந்த பஹானா ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே தலைமைச் செய்தித் தொடர்பாளர் ஆதித்ய குமார் சவுத்ரி கூறுகையில், "லாக் புத்தகத்தைக் கைப்பற்றியுள்ள சிபிஐ அதிகாரிகள் ரயில் நிலையத்துக்கு சீல் வைத்திருக்கிறது. சிக்னல் அமைப்பில் மிகவும் முக்கியமான ரிலே இன்டர்லாக்கிங் பேனலை ஊழியர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிபிஐ விசாரணை முடிந்து, அடுத்த அறிவிப்பு வரும் வரை பஹானா ரயில் நிலையத்தில் எந்த ஒரு பயணிகள், சரக்கு ரயில்களும் நிற்காது" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "விபத்தில் பாதிக்கப்பட்ட 1,208 பயணிகளில் 709 பேருக்கு கருணைத் தொகை மற்றும் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விபத்தில் உயிரிழந்த 288 பேர் உள்ளிட்ட 829 பேர் கருணைத் தொகை மற்றும் இழப்பீடு (உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2.5 லட்சம், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம்) பெறுவதற்கு தகுதி உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முன்பதிவு மற்றும் பொதுப்பெட்டியில் பயணம் செய்த பயணிகளும் அடங்குவர். பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது" என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை வரை, இன்னும் 81 உடல்கள் அடையாளம் காணப்படாமல் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன பயணிகளின் உறவினர்கள் டிஎன்ஏ சோதனைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளொன்றுக்கு 170 ரயில்கள் பஹானா ரயில் நிலையத்தினைக் கடந்து சென்றாலும், பத்ரக் - பாலசோர் எம்இஎம்யு, ஹவுரா பத்ரக் பஹாஜதின் பயணிகள் விரைவு ரயில், கராக்பூர் குத்ரா ரோடு பயணிகள் விரைவு ரயில் உள்ளிட்ட 7 ரயில்கள் மட்டுமே சில நிமிடங்கள் நின்று செல்லும். சில சிறப்பு தினங்களில் அருகில் உள்ள 25 கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் பயணிகள் ரயிலைப் பிடிக்க வருவார்கள். இந்த ரயில் நிலையத்தில் 10க்கும் குறைவான ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x