Published : 08 Jun 2023 06:50 AM
Last Updated : 08 Jun 2023 06:50 AM
புவனேஸ்வர்: இழப்பீடு பெறுவதற்காக ஒடிசா ரயில் விபத்தில் கணவர் இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடிய பெண் மீது கணவரே புகார் கொடுத்துள்ளார்.
ஒடிசாவின் கட்டாக் மாவட்டம், மணியபந்தா பகுதியை சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவர், ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி அடுத்தடுத்து நிகழ்ந்த ரயில் விபத்தில் தனது கணவர் இறந்துவிட்டதாகவும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும் ஓர் உடலையும் அடையாளம் காட்டியுள்ளார். ஆனால், ஆவணங்களை சரிபார்த்ததில், அவரது கோரிக்கை பொய் எனத் தெரியவந்தது. இதையடுத்து கீதாஞ்சலியை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் கீதாஞ்சலிக்கு எதிராக அவரது கணவர் பிஜய் தத்தா, மணியபந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “அரசுப் பணத்தை அபகரிக்க முயன்றது மற்றும் நான் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் அளித்ததற்காக கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இத்தம்பதியினர் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகவும் தற்போது கணவரின் புகாரை தொடர்ந்து மனைவி தலைமறைவாகி விட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து நிகழ்ந்த, பாலசோர் மாவட்டம், பாகாநாகா பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கீதாஞ்சலியின் கணவரிடம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விபத்து இழப்பீடு பெறுவதற்காக அடையாளம் காணப்படாத உடல்களில் ஒன்றை காட்டி யாரேனும் மோசடி செய்ய முயன்றால் அவர்கள் மீது கடும்நவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் பி.கே.ஜெனா உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT