Published : 08 Jun 2023 05:50 AM
Last Updated : 08 Jun 2023 05:50 AM

ஒடிசா ரயில் விபத்துக்கு தவறான சிக்னல்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது - விசாரணைக் குழுவில் இடம்பெற்ற அதிகாரி மாறுபட்ட கருத்து

பாயின்ட் பாக்ஸ்.

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோர் அருகே பாஹநாகா பஜார் ரயில்நிலையம் அருகே நடந்த விபத்துக்கு தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதுதான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று விசாரணைக் குழுவில் இடம்பெற்ற அதிகாரி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்டதில் 288 பேர் உயிரிழந்தனர். 1,100 பேர் காயமடைந்தனர். சமீப காலங்களில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

பாஹநாகா பஜார் ரயில் நிலையம் அருகே பச்சை சிக்னல் விளக்கு எரிந்ததால் ரயில், லூப் லைனில் முன்னேறிச் சென்று விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தவறான சிக்னலால்தான் விபத்து நடந்துள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த 5 நிபுணர்கள் இதைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ரயில்வேயின் சிக்னல்கள் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் மூத்த செக் ஷன் இன்ஜினீயரான (பாலசோர்) ஏ.கே.மகந்தா, தற்போதுபுதிய அறிக்கை ஒன்றை ரயில்வே மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் ரயில் விபத்துக்குதவறான சிக்னல் கொடுக்கப்பட்டதுதான் காரணம் என்பதை ஏற்க அவர் மறுத்துள்ளார்.

சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ரயிலுக்கு, மெயின் லைனில் செல்வதற்கு மட்டுமே சிக்னல் தரப்பட்டதாகவும், லூப் லைனில் செல்வதற்கு சிக்னல் தரப்படவில்லை என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மகந்தா அதில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ரயில் தடத்திலும் செல்லும் ரயில்கள், அனுப்பப்படும் சிக்னல் விவரங்கள் டேட்டாலாகர் எனப்படும் அறிக்கையில் பதிவாகிக் கொண்டே வரும். டேட்டாலாகர் அறிக்கையின்படி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் செல்வதற்கு மட்டுமே சிக்னல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டேட்டாலாகர் என்பது,ரயில்வே சிக்னலிங் சிஸ்டத்தை கண்காணிக்கும் மைக்ரோபுராஸசர் அடிப்படையிலான தொழில்நுட்பமாகும். இந்த டேட்டாலாகரில் அனைத்து விதமான விவரங்களும் சேகரிக்கப்பட்டிருக்கும். இதை மாற்றமுடியாது. அதிலிருந்து நாம் அறிக்கைகளைப் பெற முடியும். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினின் பைலட்டாலும் தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தத் தடத்தில் உள்ள பாயிண்ட் இயந்திரம் 17-ஏ எனப்படும் பாயிண்ட்டானது அப் லூப் லைன் எனப்படும்ரிவர்ஸ் நிலையில் அமைக்கப்பட் டுள்ளது. அதாவது, லூப் லைனில் ரயில் வருவதற்கு அனுமதிக்கும் பாயிண்ட்டாகும். அது இயல்பான நிலையில் இருந்தால், மெயின் லைனில் மட்டுமே ரயிலைச் செல்ல அனுமதிக்கும். ரிவர்ஸ் லைனில் இருந்தால் ரயிலை லூப் லைனில் அனுமதிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நேர்பாதைக்கு சிக்னல் இருந்தும் கிளை பாதையில் சென்றது ஏன்?: தண்டவாளத்தில் ஒரு பாய்ன்ட் வழக்கமான (நார்மல்) நிலையில் இருந்தால், அது நேர்பாதையிலும் (மெயின் லைன்), அதே பாய்ன்ட்‘ரிவர்ஸ்’ நிலையில் இருந்தால், அது கிளை பாதையிலும் (லூப் லைனில்)இருக்கும். இந்த விபத்தை பொறுத்தவரை, ரயில் நிலையத்தில் விபத்தில் சம்பந்தப்பட்ட பாய்ன்ட் 17ஏ வழக்கமான நிலையில், நேர் பாதையில் இருந்து பச்சை நிற சிக்னல் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில், கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பச்சை நிற சிக்னல் கிடைத்துள்ளது.

ஆனால், ரயில் வழக்கமான நிலையில் நேராக செல்லாமல் (மெயின் லைனில்) கிளைப் பாதையில் (லூப் லைனில்) சென்று இருக்கிறது. 17ஏ பாய்ன்ட் வழக்கமான நிலையை காட்டுகிறது. ஆனால், பேனலில் வழக்கமான நிலை காட்டி (மெயின் லைன்) நேராக செல்வதாக சிக்னல் வந்துள்ளது. ஆனால், கோரமண்டல் விரைவு ரயில் கிளை பாதையில் சென்றுள்ளது. இதற்கு காரணம், வழக்கமான பாதைக்கான அடையாளத்தை காண்பித்துவிட்டு, கிளை பாதைக்கான ரிவர்ஸ் நிலையில் உள்ளது. இதை வைத்து, சம்பந்தப்பட்ட சிக்னல் துறை பொறியாளர்கள், சிக்னல் நேராக இருந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x