Published : 07 Jun 2023 07:49 AM
Last Updated : 07 Jun 2023 07:49 AM
பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் அந்த ரயிலின் சில பெட்டிகள் பக்கத்து ரயில் பாதையில் விழுந்தன.
இதனால் அப்போது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்தில் சிக்கியது. இந்தக் கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,100 பேர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த ரயில் விபத்தில் மீட்புப் பணிகளுக்குப் பிறகு, ரயில் பாதை முழு வீச்சில் சீரமைக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது “விபத்தில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 40 உடல்களில் எந்தவித காயமோ அல்லது ரத்தக் கறையோ இல்லை. இவர்கள் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்க வாய்ப்புள்ளது” என்றார்.
இவர் கூறியதையே விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கை பிரதிபலிக்கிறது. விபத்து குறித்து அரசு ரயில்வே காவல் துறையின் (ஜிஆர்பி) சப்-இன்ஸ்பெக்டர் பப்பு குமார் நாயக் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் “பயணிகள் பலர் காயத்தால் உயிரிழந்தனர். ரயில்கள் மோதிக்கொண்டது அல்லது மின்சாரம் பாய்ந்ததில் இவர்கள் காயம் அடைந்திருக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.
தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதிய பிறகு தண்டவாளத்திற்கு மேல் செல்லும் மின்சார கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்தில் ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டதிலும் அவை தண்டவாளத்திற்கு மேல் செல்லும் உயரழுத்த மின் கம்பி மீது உரசியிருக்கவும் வாய்ப்புள்ளது என ஓய்வுபெற்ற ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறினார். அடையாளர் தெரியாத நபர்களின் கவனக்குறைவால் மரணம் நேரிட்டதாக ஜிஆர்பி வழக்கு பதிவு செய்துள்ளது.
இழப்பீடு பெறலாம்
இதனிடையே தென்கிழக்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி நேற்று கூறும்போது, “விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை 530-க்கும் மேற்பட்டோருக்கு சுமார் 15.6 கோடி வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு கோர விரும்புவோர் கட்டாக், மிட்னாபூர், புவனேஸ்வர், பாலசோர் ஆகிய இடங்களில் உள்ள எங்கள் உதவி மையங்களை அணுகலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT