Published : 07 Jun 2023 05:25 AM
Last Updated : 07 Jun 2023 05:25 AM

பாலசோர் ரயில் விபத்தில் தொடரும் சோகம் - 101 பேரின் உடல்களை அடையாளம் காணமுடியாமல் திணறும் ஒடிசா

புவனேஸ்வர்: பாலசோர் ரயில் விபத்தில் இன்னும் 101 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாமல் திணறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மோதிக் கொண்டதில் 278 பேர் உயிரிழந்தனர். 1,100 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் முழுமையடைந்து தண்டவாளங்களை சீரமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.

தற்போது அந்தத் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உயிரிழந்த 278 பேரில் 101 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாமல் ஒடிசா அதிகாரிகள் திணறி வருகின்றனர். அடையாளம் காணப்படாத உடல்கள் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் அங்கு திரண்டு வந்து உடல்களைத் தேடி வருகின்றனர். விபத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை புகைப்படங்களாக எடுத்து அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு விபத்தில் சிதைந்து போயிருப்பதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே புகைப்படங்களை வைத்து அடையாளம் காண்பதில் உறவினர்கள் திணறி வருகின்றனர்.

சிலர், மின்சாரம் தாக்கி இறந்திருப்பதால் அவர்களது முகங்கள் கருகிவிட்டன. அவர்களின் முகங்களைக் கண்டறிவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது மகனைத் தேடி வந்த ஒருவர் கூறும்போது, “விபத்துக்குள்ளான ரயிலில் எனது மகன் வந்தான். அவரது உடலை அடையாளம் காண்பதற்காக நாங்கள் இங்கு வந்தோம். ஆனால், இதுவரை அவனின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்குள்ள புகைப்படங்களை வைத்து தேட முடியவில்லை. புகைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன” என்றார்.

இதேபோல் பிஹாரிலிலுள்ள சமஸ்திபூரைச் சேர்ந்த ஒருவர் ரயில் விபத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை அடையாளம் வந்த அவரது குடும்பத்தாரும் இதே காரணத்தைக் கூறி அடையாளம் காண்பது சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

பிஹாரின் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் ரயிலில் வந்துள்ளனர். விபத்தில் 6 பேரும் இறந்துவிட்டனர். ஆனால் முகமது தாஹிர் என்பவரது உடலை மட்டுமே அடையாளம் காண முடிந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வைத்து அடையாளம் காண முடியவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுவரை 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகளும், ரயில்வே அதிகாரிகளும் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு ரயில்வேயின் டிவிஷனல் மேலாளர் ரிங்கேஷ் ராய் கூறும்போது, “ஒடிசாவின் பல்வேறு மருத்துவமனைகளில் 200 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சுமார் 1,100 பேர் காயமடைந்தனர். இதில் 900 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர். இறந்த 278 பேரில் 101 பேரின் அடையாளத்தை கண்டறிய முடியவில்லை” என்றார்.

புவனேஸ்வர் நகரசபை ஆணையர் விஜய் அம்ரித் குலாங்கே கூறும்போது, “புவனேஸ்வரில் வைக்கப்பட்டுள்ள 193 பேரின் உடல்களில் 80 பேரின் அடையாளம் தெரிந்துவிட்டது. இதில் 55 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மற்ற உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x