Published : 05 Jun 2023 01:24 PM
Last Updated : 05 Jun 2023 01:24 PM

ரயில்வேயில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்பாதது ஏன்?- பிரதமருக்கு கார்கே கடிதம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: ரயில்வே துறையில் காலியாக உள்ள 3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு 4 பக்க கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது: ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்து. இந்த விபத்தால் நாடு அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த துயரமான தருணத்தில் நாடு ஒன்றுபட்டு நின்றாலும், ஏராளமான உயிர்கள் பறிபோனதை இழப்பீடு மூலமோ, ஆறுதல் வார்த்தைகள் மூலமோ சரி செய்துவிட முடியாது.

போக்குவரத்துத் துறையில் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், சாமானிய இந்திய மக்களின் முக்கிய வாகனமாக ரயில்வேதான் திகழ்கிறது. இந்தியன் ரயில்வே நம்பகமானது அல்ல; ஆனால் மலிவானது. ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை எண்ணிக்கை எத்தனையோ அந்த அளவுக்கு மக்கள் இந்தியாவில் நாள்தோறும் ரயிலில் பயணிக்கிறார்கள். ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் தற்போது மிகவும் முக்கியம்; மேம்போக்கான மாற்றங்கள் அல்ல.

இந்திய ரயில்வே அதிக செயல்பாடு கொண்டதாகவும், அதிக நவீனமானதாகவும், அதிக திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியன் ரயில்வே மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகிறது. தொடர்ந்து தவறான முடிவுகள் எடுக்கப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு பாதுகாப்பற்றதாக மாற்றப்படுகிறது.

இந்திய ரயில்வேயில் தற்போது 3 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. விபத்து நிகழ்ந்த கிழக்கு ரயில்வேயில் 8 ஆயிரத்து 278 காலி பணியிடங்கள் உள்ளன. இதில், உயர் பொறுப்புகளுக்கான பணியிடங்களும் அடங்கும். பணியிடங்களை நிரப்புவதில் பிரதமர் அலுவலகமும், அமைச்சரவைக் குழுவுமே முக்கிய பங்காற்றுகின்றன. 90களில் இந்திய ரயில்வேயில் 18 லட்சம் பணியாளர்கள் இருந்தார்கள். அது தற்போது 12 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிலும், 3.18 லட்சம் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். இந்த காலி பணியிடங்கள் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த பணியிடங்களால் எஸ்.சி. எஸ்டி, ஒபிசி சமூக மக்கள் பலனடைய முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்?

ரயில் இன்ஜின் ஓட்டுநர்கள் அவர்களுக்கான வழக்கமான நேரத்தைத் தாண்டி நீண்ட நேரம் ரயில்களை ஓட்டுகிறார்கள் என்பதை ரயில்வே வாரியம் சமீபத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அதிக பணிச்சுமை கொடுப்பது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்?

மைசூரில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதை சுட்டிக்காட்டிய தென் மேற்கு பிராந்திர ரயில்வேயின் தலைமை செயல் நிர்வாகி, சிக்னல் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டிய தேவை இருப்பதாகக் கூறினார். சிக்னல் சிஸ்டத்தில் உள்ள குறைபாடு எதிர்காலத்தில் விபத்துக்க வித்திடக்கூடும் என்றும் அவர் கூறி இருந்தார். மிக முக்கிய எச்சரிக்கையை இந்திய ரயில்வே அமைச்சகம் புறக்கணித்தது ஏன்?

பாதுகாப்புக்கான தொழில்நுட்பம் இல்லாத நிலையில் பாலசோர் ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில்வே அமைச்சரின் பேச்சு மூலம் இது அம்பலமாகி இருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் காட்டப்பட்டிருக்கும் அலட்சியம் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. பாதுகாப்புக்கான தொழில்நுட்பத்தை அனைத்து ரயில்களுக்கும் உடனடியாக பொறுத்த வேண்டும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அரசு மேற்கொள்ள வேண்டிய மிக முக்கிய பணி. இதையே பாலசோர் ரயில் விபத்து உணர்த்தி இருக்கிறது. இவ்வாறு மல்லிகார்ஜுன் கார்கே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x