Published : 05 Jun 2023 06:23 AM
Last Updated : 05 Jun 2023 06:23 AM
புதுடெல்லி: ஓடிசா ரயில் விபத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில், மேற்கு வங்கத்தின் ஷாலிமரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் பிரதான தண்டவாளத்திலிருந்து இணைப்புத் தண்டவாளத்துக்கு மாறி, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதனால், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. இந்நிலையில் மற்றொரு தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மோதின. இந்தவிபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக ஓடிசா மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தொழில்நுட்பப் பிரச்சினையால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் விரைவில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய அரசு விசாரணைக் குழுஅமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர், “விபத்துக்கான மூலக் காரணத்தை விசாரிக்க வேண்டும். ரயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு அமைப்பு குறித்து தீவிர ஆய்வு நடத்த வேண்டும். இந்த விசாரணையை 2 மாதங்களுக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT