Published : 05 Jun 2023 06:30 AM
Last Updated : 05 Jun 2023 06:30 AM
புதுடெல்லி: ரயில்வேயின் ‘கவச்’ பாதுகாப்பு தொழில்நுட்பம் அறிமுகமாகியிருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்திருக்க முடியும் என கூறப்படுகிறது.
ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி தவறான பாதையில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி கவிழ்ந்ததில், அருகில் உள்ள பாதையில் வந்த ஹவுரா ரயிலும் மோதி தடம்புரள நேரிட்டது. ஒரே நேரத்தில் 3 ரயில்கள் மோதிய விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.
ஒரே பாதையில் இரு ரயில்கள் மோதிக் கொள்ளும் விபத்தை தவிர்ப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ‘கவச்’ தொழில்நுட்பம் ஒடிசா வழித்தடத்தில் அறிமுகமாகியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என கூறப்படுகிறது.
கவச் என்றால் என்ன?
கவச் தொழில்நுட்பத்தை ஆர்டிஎஸ்ஓ என்றஆராய்ச்சி அமைப்பு, 3 இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியது. ஒடிசா ரயில் விபத்துக்குப்பின், இந்த தொழில்நுட்பம்தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரயில் டிரைவர் சிக்னலை மீறி சென்றால், இந்த கவச் உடனே எச்சரிக்கை விடுக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு பாதையில் இருரயில்கள் இருப்பதை அறிந்தவுடன், இந்த தொழில்நுட்பம் ரயிலின் பிரேக்குகளை தானாக இயக்கி ரயிலை நிறுத்தும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட ரயில் அதிவேகமாக செல்லும் போதும் இது ரயில் டிரைவருக்கு எச்சரிக்கை விடுக்கும். அடர்த்தியான பனிமூட்டத்தில் ரயிலை இயக்கவும் இது ரயில் டிரைவருக்கு உதவியாக இருக்கும். இன்னும் பல பாதுகாப்பு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. ரூ.16.88 கோடி செலவில் இந்த கவச் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.
இந்த கவச் தொழில்நுட்பம் தெற்கு மத்திய ரயில்வேயில் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி வழித்தடத்திலும், விகாராபாத் - பிதர்வழித்தடத்திலும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து இந்த கவச் தொழில்நுட்பத்துக்கான ஆர்டர் 3 நிறுவனங்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கவச் தொழில்நுட்பம் 1,455 கி.மீ வழித்தடத்தில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி-ஹவுரா மற்றும் புதுடெல்லி - மும்பை வழித்தடங்களில் கவச் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இலக்கை அடுத்தாண்டு மார்ச்மாதத்துக்குள் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பின் கிடைக்கும் அனுபவங்களை வைத்து கவச் தொழில்நுட்பத்தை பிற இடங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கவச் தொழில்நுட்பம் அறிமுகமாகியிருந்தால், ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT