Published : 05 Jun 2023 06:49 AM
Last Updated : 05 Jun 2023 06:49 AM
பாலசோர்: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:
இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ரயில்வே இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தனர். உலகம் முழுவதும் இந்த தொழில்நுட்பத்திலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் தண்டவாளத்தில் ரயில்வே கேட், சிக்னல்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாயின்ட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை கட்டுப்பாட்டு அறைகளின் பேனல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பு இன்டர்லாக்கிங் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு ரயில் குறிப்பிட்ட பாதையில் செல்லும்போது அந்த வழித்தடத்தில் வேறு எந்த ரயிலும் இல்லை என்பது இன்டர்லாக்கிங் மூலம் முதலில் உறுதி செய்யப்படும். உதாரணமாக ரயில்வே கேட் பூட்டப்பட்டு இன்டர்லாக்கிங் கட்டமைப்புடன் இணைத்த பிறகு, கேட் கீப்பர் நினைத்தால்கூட ரயில்வே கேட்டை திறக்க முடியாது. ரயில் கடந்து சென்ற பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்து பூட்டு திறக்கப்படும். அதன்பிறகே கேட் கீப்பர், ரயில்வே கேட்டை திறக்க முடியும்.
இதேபோல இணைப்பு தண்டவாளங்களில் ஏதாவது ஒரு ரயில் நிறுத்தப்பட்டிருந்தால் அங்குள்ள பாயின்ட் இயந்திரம் வாயிலாக இணைப்பு தண்டவாளம் ‘லாக்' செய்யப்படும். இதன்படி வேறு எந்த ரயிலும் அந்த இணைப்பு தண்டவாளத்துக்கு செல்ல சிக்னல் கிடைக்காது. ஒடிசாவின் பாஹாநாகா பஜார் பகுதியின் இணைப்பு தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அங்குள்ள பாயின்ட் இயந்திரம் ‘பாயின்ட் 17’ என்று அழைக்கப்படுகிறது. அந்த பாயின்ட் இயந்திரத்தில் செய்யப்பட்டிருந்த தவறான மாற்றமே மிகப்பெரிய ரயில் விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
பாயின்ட் 17-ன் தவறான ‘லாக்' காரணமாக இன்டர்லாக்கிங் தானியங்கி நடைமுறையில் இணைப்பு தண்டவாளத்தில் செல்ல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கிடைத்திருக்கிறது. அந்த பாயின்ட் இயந்திரத்தில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை தீவிரமடைந்து உள்ளது.
இதையே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பேட்டியில் கூறியுள்ளார். ‘‘இன்டர்லாக்கிங்பிரச்சினையால் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான கிரிமினல்கள் கண்டறியப்படுவார்கள்’’ என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT