Published : 04 Jun 2023 09:48 PM
Last Updated : 04 Jun 2023 09:48 PM

ஒடிசா ரயில் விபத்து | பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவேன் - சேவாக் அறிவிப்பு

சேவாக் | கோப்புப்படம்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். கடந்த 2-ம் தேதி நடைபெற்ற இந்த விபத்தில் பயணிகளுடன் சென்ற 2 அதிவேக ரயில்கள் மற்றும் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்டதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர், 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் சேவாக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்தாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது விபத்து நடைபெற்ற இடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த இடம் வழக்கம் போல ரயில் போக்குவரத்து மேற்கொள்ளப்பட உள்ளது.

“இந்தப் புகைப்படம் நமக்குள் நீண்ட நாளுக்கு தாக்கம் கொடுக்கும். இந்த துயரமான நேரத்தில் ஒடிசா ரயில் விபத்தில் தங்களது பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு என்னால் முடிந்தது கல்வி அறிவு கொடுப்பது தான். சேவாக் சர்வதேச உரைவிட பள்ளியில் இந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவேன்.

மேலும், இந்த விபத்தில் மீட்பு பணியில் உதவ முன்வந்த ஆண்கள், பெண்கள் மற்றும் ரத்த தானம் செய்ய முன்வந்த தன்னார்வலர்கள் என அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். நாம் அனைவரும் இதில் ஒன்றாக நிற்போம்” என சேவாக் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x