Published : 04 Jun 2023 12:11 PM
Last Updated : 04 Jun 2023 12:11 PM
புவனேஸ்வர்: ஒடிசாவில் ஜூன் 2ஆம் தேதி நடந்த ரயில் விபத்திற்கான மூலக் காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்துப் பகுதியில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று (ஞாயிறு) காலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "மிக மோசமான இந்த ரயில் விபத்து குறித்த விசாரணை முடிவடைந்தது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் அறிக்கையை தாக்கல் செய்வார். விபத்திற்கான காரணம் என்ன? அதில் யாருக்கு பங்கு? என்பதைக் கண்டறிந்துவிட்டோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பிரச்சினையால் இந்த விபத்து நடந்துள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் முழுமையான தகவல்கள் வெளியாகும்" என்றார்.
ரயில்வே பாதை சீரமைப்புப் பணியில் 1000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன?
இந்திய ரயில்வேயில் முன்பு ரிலே இன்டர்லாக்கிங் முறை தான் செயல்பாட்டில் இருந்தது. தற்போது எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் (EI) சிக்னல் அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. இது கணினி வாயிலாக மாற்றத்தக்கது. இந்த நவீன் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து நடந்துள்ளது.
ரயில் விபத்து நடந்தது என்ன? மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 2) பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் - பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் இருந்து இணைப்பு தண்டவாளத்துக்கு ரயில் மாறியுள்ளது. இணைப்பு தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகளை துளைத்து 3-வது பெட்டியின் மீது பயணிகள் ரயிலின் இன்ஜின் ஏறியது. மோதிய வேகத்தில், கோரமண்டல் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டு, 3-வது தண்டவாளத்தின் குறுக்கே நின்றன.
அதே நேரம், பெங்களூரூவில் இருந்து ஹவுரா செல்லும் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்திசையில் அதே பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு - ஹவுரா ரயில் பயங்கரமாக மோதிதடம் புரண்டது. இந்த விபத்தில் கோரமண்டல் ரயிலின் 3 பெட்டிகள், ஹவுரா ரயிலின் 2 பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன.
2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT