Published : 03 Jun 2023 04:17 PM
Last Updated : 03 Jun 2023 04:17 PM

“கடினமான நேரத்தில்...” - ரஷ்ய அதிபர் முதல் பாக். பிரதமர் வரை | ஒடிசா ரயில் விபத்துக்கு வேதனை பகிர்ந்த உலகத் தலைவர்கள்

புதுடெல்லி: ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து நேரிட்டதை அடுத்து, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்: ஒடிசா ரயில் விபத்தை அடுத்து தனது ஆழ்ந்த வேதனையை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள செய்தியில், "விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் கிஷிடா: ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் விலைமதிப்பில்லாத பல உயிர்கள் மடிந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அரசு சார்பிலும் ஜப்பான் மக்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டெர் லேயன்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்தத் துயரமான நேரத்தில் இந்திய மக்கள்தான் எங்கள் மனங்களில் இருக்கிறார்கள். உங்களுடன் சேர்ந்து ஐரோப்பாவும் வருந்துகிறது

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: ஒடிசாவில் நிகழ்ந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பார்த்து மனம் உடைந்துவிட்டேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நான் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என எண்ணுகிறேன். இந்தக் கடினமான நேரத்தில் இந்திய மக்களோடு கனடா நாட்டு மக்களும் உடன் நிற்கிறார்கள்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்: இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப்பது மிகுந்த துயரத்தை அளித்திருக்கிறது. இந்த சோகமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

தைவான் அதிபர் சாய் இங்வென்: இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு பலர் காப்பாற்றப்பட்டிப்பார்கள் என நம்புகிறேன்.

இங்கிாலந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி: இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகமானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகள் கிடைக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்: ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக உள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி: ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனையை அளித்திருக்கிறது. உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் குறித்தே கவலை கொள்கிறேன். அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x