Published : 26 May 2023 06:17 PM
Last Updated : 26 May 2023 06:17 PM
காரைக்குடி: காரைக்குடி பாதாளச் சாக்கடை கழிவுநீரை தேனாற்றில் திறந்துவிடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரைக்குடி நகராட்சியில் 2017-ம் ஆண்டு ரூ.112.5 கோடியில் பாதாளச் சாக்கடை பணி தொடங்கியது. 144.19 கி.மீ.-க்கு குழாய்கள் பதிக்கப்பட்டன. 5,559 ஆள் நுழைவு தொட்டிகள், ரஸ்தா நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே ஒரு நாளுக்கு 16 மில்லியல் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. பாதாளச் சாக்கடை பணி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச்சில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால் இதுவரை முழுமையாக முடிவடையாமல் உள்ளது.
இதனால் திட்ட மதிப்பும் ரூ.140 கோடியாக உயர்ந்தது. இந்த பாதாளச் சாக்கடை திட்டத்தில் மொத்தம் 31,725 வீடுகள், வணிக நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ரூ.6 கோடியில் 7,250 வீடுகளை இணைக்கும் பணி நடைபெற்றது. முதற்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டநிலையில், நாளை (மே 27) பாதாளச் சாக்கடை திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.
இந்நிலையில், பாதாளச் சாக்கடை கழிவுநீர் அருகேயுள்ள தேனாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காரைக்குடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து காரைக்குடி சமூக ஆர்வலர் திருஞானம் கூறும்போது, “பாதாளச் சாக்கடை கழிவுநீரை தேனாற்றில் திறந்துவிட்டுள்ளனர். தற்போது கோடை மழை பெய்து வருவதால் கழிவுநீர் ஆற்றில் அடித்து செல்லப்படும். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும். கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "சோதனை ஓட்டத்துக்காக ஆற்றில் இருந்து தண்ணீர் தான் எடுக்கிறோம். கழிவுநீரை விடவில்லை" என்று கூறினர்.
ஆற்றில் தண்ணீர் எடுப்பதோ, கழிவுநீர் விடுவதோ விதிமீறல் என்பதால் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT