Published : 07 May 2023 04:05 AM
Last Updated : 07 May 2023 04:05 AM

தேவசமுத்திரம் ஏரியில் முகாமிட்ட இரு யானைகள் - வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள்

கிருஷ்ணகிரி நகரையொட்டியுள்ள தேவசமுத்திரம் ஏரியில் முகாமிட்டுள்ள இரு யானைகள்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரையொட்டியுள்ள தேவசமுத்திரம் ஏரியில் நேற்று 2 யானைகள் தஞ்சம் அடைந்தன. யானைகளை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி வனப்பகுதியிலிருந்து இரு யானைகள் ஏப்ரல் 25-ம் தேதி வெளியேறி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்துக்கு வந்தன. மேலும், அவை தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றிய நிலையில், வனத்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள சஞ்சீவராயன் மலைப் பகுதிக்கு இடம்பெயரச் செய்தனர்.

இதனிடையே, இந்த யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொரசுப்பட்டி பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவரைத் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் எதிரே உள்ள தேவ சமுத்திரம் ஏரிக்கு வந்து, நீரில் உற்சாகமாகக் குளித்தன.

ஏரியின் நடுவே மின்கம்பம் இருந்த நிலையில், யானைகளுக்கு மின்சாரத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின் வாரிய அலுவலர்கள் மூலம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஏரியில் இரு யானைகள் இருக்கும் தகவல் அறிந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏரியின் கரையில் திரண்டு, வேடிக்கை பார்த்தனர்.

இதனால், கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, டிஎஸ்பி தமிழரசி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு, பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும், உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் ராஜ மாரியப்பன் தலைமையில் வனச்சரகர்கள் ரவி (கிருஷ்ணகிரி), பார்த்த சாரதி (ராயக்கோட்டை), வனவர்கள் சரவணன்,

தேவ் ஆனந்த், அண்ணாதுரை, வெங்கடாசலம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானைகள் தேசிய நெடுஞ்சாலைக்குள் வராமல் இருக்க தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஆட்சியர் தீபக் ஜேக்கப், இரு யானைகளையும் பாதுகாப்பாக வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்யும் பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நேற்று காலை முதல் மாலை வரை ஏரி நீரில் சுற்றிய யானைகள் மாலை 6 மணிக்கு மேல் ஏரியை விட்டு வெளியேறி கரைப்பகுதிக்கு வந்தன. இருப்பினும், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் இரவில் யானைகளை அங்கிருந்து பாதுகாப்பாக வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்ய தேவையான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x