Published : 09 Sep 2017 09:55 AM
Last Updated : 09 Sep 2017 09:55 AM
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளே கூட்டாக விலை நிர்ணயம் செய்வதன் மூலம், தங்கள் விலைபொருளுக்கு உரிய விலையை பெற்றுவருகின்றனர்.
தங்கள் உழைப்புக்கான பலன் கைக்கு எட்டாத கவலையில் விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு மட்டங்களில் பலர் விலை நிர்ணயம் செய்வதால் உற்பத்தியாளர், நுகர்வோர் என இருதரப்பினரும் நெருக்கடியைச் சந்திப்பது தொடர்கிறது. தற்போது இந்த இடைத்தரகர்களின் இடத்தைப் பெருநிறுவனங்கள் வளைத்து வருவதால், வெகுஜன சந்தையின் போக்கு மேலும் மாறியுள்ளது.
திமிறும் சந்தையின் போக்குக்கு மூக்கணாங்கயிறு கட்ட, ஆங்காங்கே முன்னோடி விவசாயிகள் ஒன்றுகூடி தமக்கான சந்தை விலையைத் தாங்களே தீர்மானிக்க முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு உதாரணமாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தின் இயற்கைவழி சிறுதானிய விவசாயிகளைச் சொல்லலாம்.
சவாலான விவசாயம்
தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களில் ஒன்று பெரம்பலூர். முக்கிய ஆறுகளோ வேறு நீராதாரங்களோ இங்கே இல்லை. ஆங்காங்கே தென்படும் கிணறு, ஏரிகளை நம்பி, பெருவாரியான மானாவாரி நிலங்கள் இப்பகுதியில் தப்பிப் பிழைத்து இருக்கின்றன. பல தலைமுறைகளுக்கு முந்தைய பாரம்பரிய விவசாயிகள் சிறுதானியங்களைப் பயிரிட்டு தங்கள் உணவுக்கும் குடும்பப் பொருளாதாரத்துக்கும் வழி வகுத்திருந்தனர்.
ஆனால் இடையில் மக்காச்சோளம், பி.டி. பருத்தி எனத் தடம் மாறியதில், அதிகப்படியான செலவு, கையைக் கடிக்கும் கடன் என விவசாயிகள் தடுமாற ஆரம்பித்தனர். அதிலும் பின்தங்கிய ஒன்றியமான வேப்பூர் பகுதியில் விவசாயம் சவாலாகிப்போனது.
கடந்த சில வருடங்களாக முன்னோடி உழவர்கள், தன்னார்வலர்கள் பங்கெடுப்பில் வேப்பூர் சிறுதானிய விவசாயிகள் மீண்டும் மரபுப் பாணிக்குத் திரும்பி உள்ளனர். இவ்வகையில் பரவலாக சிறுதானியப் பயிர்களை இயற்கை முறையில் விளைவித்ததோடு, உரிய சந்தையை அடையாளம் கண்டு சிறப்பான விலையையும் பெற்றுள்ளனர்.
இயற்கைவழி சிறுதானியம்
கீழப்பெரம்பலூரைச் சேர்ந்த மூத்த விவசாயி பொன்னுசாமி, அவர்களில் ஒரு விவசாயி. “15 வருஷத்துக்கு முன்னாடி எங்க பகுதியில் அதிக லாபம்னு ஆசைகாட்டி தினுசுதினுசா மக்காச்சோளத்தையும் பி.டி. பருத்தியையும் அறிமுகப்படுத்தினாங்க. ஒண்ணு ரெண்டு போகம் ஆஹா ஒஹோன்னு இருந்துச்சு. அதுக்கப்புறம் விலை சரிய ஆரம்பிச்சது. விட்டதைப் பிடிக்க, விதையைக் கொடுத்தவங்களே உரம், பூச்சிக்கொல்லின்னு வலியவந்து வியாபாரம் பண்ணினாங்க. பிற்பாடு எவ்வளவு விளைச்சல் எடுத்தாலும் போட்ட செலவுக்கு நேர் காணலை.
விவசாயத்தைத் தலைமுழுகிடலாம்னுகூடத் தோணுச்சு. பருத்திக்கு வீரிய பூச்சிமருந்துகளைத் தொடர்ந்து தெளிச்சதுல ஒவ்வாமை, வயித்துப் புண்ணு வேற வந்து அவதிப்பட்டேன். பூச்சிமருந்து இல்லாம விவசாயம் செய்யவேண்டிய கட்டாயச் சூழலில் இரண்டு வருஷம் முன்னாடி சிறுதானிய விவசாயத்துக்குத் திரும்பினேன். விவரம் அறிஞ்ச சிலர் தேடிவந்து உதவினாங்க.
வரகு, குதிரைவாலி பயிரிட்டு, அதையே சாப்பிட ஆரம்பிச்சதும் ஆரோக்கியமா உணர்ந்தேன். இப்போ வருமானத்துக்குக் கருங்கண்ணிப் பருத்தியும், குடும்பத்துக்காகச் சிறுதானியங்களை ஊடுபயிராகவும், பயறு வகைகளை வரப்புப் பயிராகவும் பயிரிட்டிருக்கேன். பஞ்சகவ்ய ஊட்டம், இஞ்சிப்பூண்டு மிளகா பூச்சிவிரட்டினு உரக்கடை கடன் இல்லாமலும், உடல்நலத்துக்குப் பாதகமில்லாமலும் விவசாயம் பார்க்குறேன். என் வழியில் பலரும் இயற்கை வழியில் சிறுதானியம் பயிரிட ஆரம்பிச்சாங்க. அப்படியே எல்லாரும் கூடிப்பேசினதுல தரகர்களை ஒதுக்கிவிட்டு சந்தை விலையை நாங்களே தீர்மானிச்சதும் அதுக்கப்புறம் நடந்தது” என்கிறார் பொன்னுசாமி.
கோயில்பாளையம் கிராமத்தின் இளம் தலைமுறை விவசாயியான மதிவாணன், “உரம் பூச்சிமருந்து என அதிகப்படியான இடுபொருள் செலவோடு தொடரும் வறட்சியாலும் கிராமங்களில் கடன் வாங்கியே சீரழிஞ்சு கிடந்தோம். அதனாலேயே விவசாயம் பக்கம் திரும்பாம வேற வேலை பார்த்திட்டு இருந்தேன். சிறுதானியங்கள் செலவு வைக்காததோடு வறட்சிக்கு ஈடுகொடுக்கும்னு ‘பாமரர் ஆட்சியியல் கூடம்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு விழிப்புணர்வு தந்தாங்க.
பரிசோதனை முயற்சியாக போன வருஷம் மூன்று ஏக்கர்ல வரகு பயிரிட்டேன். மழை இல்லாததால் 70 மூட்டை எதிர்பார்த்த இடத்தில் 34 மூட்டைதான் கிடைச்சது. உழவு, விதைப்பு, அறுவடைச் செலவு அதிகமில்லாததாலும், நேரடி விற்பனை மூலம் வழக்கமான விலையைவிட இரு மடங்கா கிடைச்சதிலேயும் 55 ஆயிரம் ரூபாய் லாபம் வந்துச்சு.
இந்த வருஷம் வானம் ஏமாத்தலை. நம்பிக்கையோடு குதிரைவாலியும் வயலைச் சுத்தி இருங்கு சோளமும் பயிரிட்டிருக்கேன். நாட்டு மாடுகள் வாங்கி இயற்கை இடுபொருட்களைத் தயாரிக்க ஆரம்பிச்சிருக்கேன். குறைந்த செலவும், சரியான சந்தை விலையும் கிடைக்கும்போது வேறெந்தத் தொழிலையும்விட விவசாயமே சிறப்பானது” என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் மதிவாணன்.
சிட்லிங்கியின் அனுபவப் பாடம்
இந்தப் பகுதியில் இயற்கை சிறுதானிய விவசாயம் மீட்டெடுப்பு, விளைபொருளுக்குச் சரியான சந்தை விலை ஆகியவற்றைச் சாத்தியமாக்கியவர்கள் என்று பாமரர் ஆட்சியியல் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் க.சரவணன் குழுவினரை வேப்பூர் விவசாயிகள் அடையாளம் காட்டுகின்றனர்.
“ஆய்வுப்பணி ஒன்றுக்காக வேப்பூர் ஒன்றியத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் முகாமிட்டோம். மானாவாரி விவசாயத்துக்கான மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தின் 2013-ம் வருடத்திய ஆய்வறிக்கைபடி, நாட்டின் பின்தங்கிய ஒன்றியங்களின் வரிசையில் கடைசியாக இருந்தது வேப்பூர்.
கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேளாண் தொழில் உட்பட பல வாழ்வாதாரங்களில் பின்தங்கியிருந்த இப்பகுதியில், வேளாண்மையை இயற்கை வழிக்குத் திருப்புவதன் மூலமே வளர்ச்சிப் பாதைக்கு வர முடியும் என்பதை அறிந்தோம். இதற்காக இயற்கை விவசாயத்தின் வழியில் தங்கள் பொருளாதார வெற்றியைச் சாத்தியமாக்கிய சிட்லிங்கி பழங்குடியின விவசாயிகளைச் சந்தித்து அனுபவப் பாடம் பெற்றோம்.
நவீன பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் பொருளாதாரம், ஆரோக்கியம், சூழலியல் எனச் சீர்கெட்டிருந்த வேப்பூர் விவசாயிகள் மத்தியில் முந்தைய தலைமுறையினரின் சிறுதானியங்களை இயற்கை வழியில் மீட்டெடுக்கும் முயற்சிக்கு ஆதரவு தேட ஆரம்பித்தோம். விவசாயிகள் படிப்படியாக இயற்கைவழி வேளாண்மையில் இறங்க ஆரம்பித்தனர்.
வானம் பொய்த்து விவசாயம் நொடிக்கும் அபாயத்தில் இருந்து மீள்வதற்காக, அதுவரை பெயரளவில் சேர்ந்திருந்த விவசாயிகள் தாமாகக் கைகோத்தனர். தங்கள் கைக்காசைப் போட்டு வெள்ளாற்றிலிருந்து கிராம ஏரிகளை இணைப்பதற்கு தூர்வாருதல், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இரண்டு கி.மீ. நீளத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்கள் மேற்கொண்ட கூட்டுப்பணி அவர்களுடைய புரிதலை அதிகப்படுத்தியது.
உழைப்புக்கும் உண்டு மதிப்பு
இயற்கை இடுபொருட்களில் பூச்சி மேலாண்மை, கூட்டுறவில் நீர் மேலாண்மை ஆகியவை சாத்தியமானதும், அடுத்த கட்டமாக இடைத் தரகர்களை ஒதுக்கிவிட்டு விளைபொருட்களை விற்க முடிவு செய்தோம். முறையாகக் கணக்கெழுத வைத்து அதில் நிலத்தின் மதிப்பு, மனித உழைப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கி அடக்க விலையைத் தீர்மானித்தோம்.
பின்னர் நியாயமான லாபத்தை நிர்ணயித்து, இயற்கைவழி வேளாண்மை என்பதையும் சேர்த்து, உரிய வகையில் அனைத்தையும் ஆவணப்படுத்தி வியாபாரிகளை அணுகினோம். தனிநபர்களாக அணுகுவதைவிட கூட்டமைப்பாக விவசாயிகள் இயங்குவதும், முறையான ஆவணங்களுடன் தங்களுக்கான விலையைக் கேட்பதும் பலன் கிடைக்கவே செய்கிறது. மதிப்புக் கூட்டுப் பொருளாக்கி அவற்றில் கூடுதல் லாபம் பார்க்கும் வியாபாரிகள் எங்கள் விலைக்கு இணங்கினார்கள். இந்த வகையில் எதிர்பார்த்த விளைச்சல் குறைந்த போதும், எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாகவே கிடைத்தது.
வேப்பூர் விவசாயிகளின் இயற்கை வேளாண்மை மூலமாக, பொருளாதார லாபம் மட்டுமன்றி ஆரோக்கியமான பயிர்ச்சூழல், குடும்பத்துக்கான உணவு ஆதாரம் ஆகிய அர்த்தமுள்ள லாபங்களும் சாத்தியமாகி இருக்கின்றன. முக்கியமாக ஒற்றுமையின் பலனை இந்த விவசாயிகள் அறுவடை செய்திருப்பதைச் சொல்ல வேண்டும்.
அடுத்தகட்டமாக எங்களைச் சார்ந்திருக்காமல், பதிவு செய்யப்பட்ட தற்சார்பு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பாக மாறும் ஏற்பாடுகளில் இந்த விவசாயிகள் இறங்கியுள்ளனர். படித்த இளைஞர்கள் பலரும் இணைந்திருப்பதால் இந்தப் பணிகள் சுணக்கமின்றி நடக்கின்றன. விரைவில் தங்கள் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக்கும் முயற்சியிலும் இவர்கள் நம்பிக்கையுடன் இறங்க உள்ளார்கள்” என்று முடிக்கிறார் சரவணன்.
பாமரர் ஆட்சியியல் கூடம் தொடர்புக்கு: க.சரவணன் - 9751237734
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT